தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை உட்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி சிவகங்கை, செங்கல்பட்டு, கரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் இரவு 7:00 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் அளவிற்கு அதிக கனமழை கொட்டி உள்ளது.
கடலூரில் மீண்டும் பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிஞ்சி நகர், முல்லை நகர், குண்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில் நாளையும் (03/12/2024) கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். ஆனால் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், பள்ளி விடுமுறை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் எனவும் புதுவை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நவம்பர் இறுதியில் அதி கனமழை பெய்திருக்கும் நிலையில் டிசம்பரிலும் தமிழக மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இயல்பை விட அதிகமாக மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இயல்பை விட 31 சதவீதம் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.