அழகிய கடற்கரை நகரம் புதுச்சேரி. உலகின் சிறந்த கடற்கரை சுற்றுலாத்தலம் என பெயர் பெற்ற இந்த புதுச்சேரி இப்போது மழை நீரால் தத்தளிக்கிறது. வங்காள விரி குடாவில் ஃபெஞ்சல் புயல் உருவானபோதே புதுவை மாநிலத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. கடற்கரை நகரம் என்பதோடு இது பல புயல்களை சந்தித்த மாநிலம் என்பதால் இதையும் எதிரக்கொள்ளும் நிலையிலேயே இருந்தனர்.
டிசம்பர் 29ஆம் தேதி காலை முதலே மழை பெய்யத்துவங்கியது, போகப்போக மழை அதிகமானதால் மின்சாரம் தடைப்பட்டது. இதுவழக்கமானது என மக்கள் நினைத்தனர். ஆனால் டிசம்பர் 30, ஜனவரி 1ஆம் தேதி என நின்று நிதானமாக மழை பெய்தது. புயல் காற்று வீசியது இதனால் மழையின் தாக்கம் அதிகமானது. இதனால் மழைநீர் தேங்க துவங்கியது. நகரத்தின் பலபகுதிகள் மழை நீரால் தத்தளிக்கத் துவங்கின. ஒரு அடி, இரண்டு அடி என உள்ளே புகுந்த மழை நீர் 5 அடி உயரம் வரை வீடுகளுக்குள் நுழைந்தது. வில்லியனூர், முத்தியால்பேட்டை, பாலாஜி தியேட்டர் பின்புறம் பகுதிகள் கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் முழ்கிவிட்டன. சுமார் 2 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தற்போது வீடூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலுவையில், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாண்டிச்சேரி நகரத்தை வடிவமைத்து உருவாக்கியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். இவர்கள் மழைநீர் வடிகால்களை 200 ஆண்டுக்கு முன்பாகவே சிறப்பாக அமைத்திருந்தார்கள். இதனால் நகரத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் கடலில் போய் கலக்கும் அளவில் இருந்தது. ஆனால் இந்த புயல் மழைக்குப் பாண்டிச்சேரி நகரத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது என்கிறார்கள்.
இதற்கு வரைமுறையில்லாமல் கட்டப்பட்டுள்ள புதுப்புது ஹோட்டல்கள், விடுதிகள், வீடுகளே காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பாண்டிச்சேரியில் பாதாளசாக்கடை திட்டம் நடைமுறையில் இருந்தாலும் அது சரியாக செயல்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்துவந்தது, அது இந்த மழைக்கு உண்மை என்பது உறுதியாகியுள்ளது. மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பது ஒருபுறம் என்றால் வீட்டுக்குள் தண்ணீர் தேங்கியிருப்பதையே மக்கள் பெரும் துயரமாக நினைக்கின்றனர்.
மழையால் பெரிய பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனத் தலைவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணைஆளுனர் கைலாசநாதன் பார்வையிட்டனர். மழையால் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே முக்கிய வாழ்வாதார பிரச்சனையால் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்களின் கோபத்தை இன்னும் அதிகமாக்க வேண்டுமா என ஆலோசித்த முதலமைச்சர் ரங்கசாமி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முடிவு செய்து அறிவித்துள்ளார். அதேபோல் பசுமாட்டுக்கு 40 ஆயிரம், கன்றுக் குட்டிக்கு 20 ஆயிரம், 1 ஹெக்டர் நிலத்துக்கு 30 ஆயிரம், லேசான பாதிப்புக்கு உள்ளான வீட்டுக்கு 10 ஆயிரம், முழு வீடும் சேதமாகியிருந்தால் 20 ஆயிரம், உயிரிழப்புக்கு 5 லட்சம் என அறிவித்துள்ளார்.
முழு வீடு இடிந்திருந்தால் அதனைச் சரிசெய்ய 20 ஆயிரம் போதுமா எனக் கேள்வி எழுப்பும் பொதுமக்கள், விவசாய நிலம் 1 ஹெக்டருக்கு 30 ஆயிரம் என்பது அநியாயம். புதுவை மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.