ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். பிறகு மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்த சந்திரபாபு நாயுடு நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்ற நாள் முதல் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அதே போல் மத்திய அரசுடன் சுமுகமான முறையில் பேசி வரும் முதலவர் ஜெகன் ஆந்திர மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் திட்டங்களை உடனடியாக பெறும் வகையில் தீவிரம் காட்டி வருகிறார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இந்நிலையில் மக்களவைக்கு சபாநாயகர் ஓம் பிர்லாவை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், மக்களவையின் துணை சபாநாயகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களவையில் அதிக இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த கட்சி சார்பில் மக்களவைக்கு துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க பாஜக முடிவு செய்திருந்த நிலையில், துணை சபாநாயகர் பதவியை வேண்டாம் என கூறியதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவியை பாஜக கட்சி வழங்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் ஆந்திர மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற முடிவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியாக உள்ளதாகவும், பிரதமரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இது குறித்து பேசி வருவதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளன. அதே போல் மக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டாம் எனவும், சிறப்பு அந்தஸ்து ஒன்று தான் வேண்டும் என முதல்வர் ஜெகன் டெல்லியில் அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.