குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் இந்த சட்டதிருத்தத்தை அமல்படுத்த விடமாட்டோம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கேரளாவின் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த சட்டத்திற்கு எதிரான திடீர் போராட்டத்தில் குதித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் தலைமையில் திருவனந்தபுரத்தில் போராட்ட நடைபெறுகிறது. இதில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "நாட்டின் தற்போதைய இந்த சூழ்நிலை பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது கொள்கைகளை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரளா ஒன்றாக நிற்கிறது" என தெரிவித்தார்.