இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்களவையில் கடந்த 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றினர். இதனையடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அதில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இந்த நிலையில், இன்று (08-02-24) மாநிலங்களைவில் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘வாழ்நாள் முழுவதும் தேவகவுடா தனது அரசியல் போக்கை மாற்றிக் கொண்டுள்ளார்’ என்று பேசினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவருமான தேவகவுடா, “குமாரசாமி காங்கிரஸால் நீக்கப்பட்டபோது, நான்தான் அவரை பா.ஜ.க.வில் சேர வலியுறுத்தினேன். காங்கிரஸ் கட்சி மற்றவர்களை வளர விடமாட்டார்கள் என்று நான் கூறினேன். மல்லிகார்ஜுன கார்கேவை இந்த நாட்டின் பிரதமராக்குவதை காங்கிரஸ் பொறுத்துக் கொள்ளுமா? எனக்கு காங்கிரஸ் பற்றி நன்றாகத் தெரியும்.
காங்கிரஸ்காரர்கள் சிலர் எனது கட்சியை அழிக்க நினைத்தார்கள். கட்சியை காப்பாற்றுவதற்காக எனது ஆதரவை பா.ஜ.க.வுக்கு வழங்க முடிவு செய்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அப்படி செய்யவில்லை. இதற்கு பலனாக பிரதமர் மோடியின் அன்பும், பாசமும் எனக்கு பலனாக கிடைத்தது” என்று கூறினார்.