புதிய பணியாளர்கள் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு பெண் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் நான்கு மாத கழித்தே பணியில் சேர தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்விதி கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே கொண்டுவரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெறப்பட்டது. தற்போது மீண்டும் அவ்விதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்துக்கு எதிரான ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி எம்.பி. சு.வெங்கடேசன் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஸ்டேட் வங்கி 31.12.2021 அன்று பணி நியமனங்கள் குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அதிர்ச்சி தருகிறது. நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளின், மாதர் இயக்களின், தொழிற் சங்கங்களின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. ஸ்டேட் வங்கி 2,50,000 ஊழியர்களை கொண்ட அதில் 62,000 மகளிர் ஊழியர்களை கொண்ட பெரிய அரசு வங்கி.
வங்கித் துறையில் இவ்வளவு அதிகமாக வேலை வாய்ப்பு தருகிற இன்னோரு வங்கி கிடையாது. ஆனால் இவ்வளவு பெரிய வங்கி பாலின நிகர் நிலைப் பார்வையில் இவ்வளவு சுருங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட வேண்டும், கருவுற்ற மகளிருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையப்பட வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா அவர்களுக்கும், ஸ்டேட் வங்கி தலைவருக்கும் கடிதங்கள் எழுதியுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.