நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஊசி எதுவும் போடாமல் 'கோ-வின்' செயலியின் மூலம் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
தடுப்பூசி ஒத்திகைக்கான நடைமுறைகள்:
தடுப்பூசி செலுத்தப்படும் நபரின் முழு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும். பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும் நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மையத்திற்கு வரும் நபர்கள் கைகளைக் கழுவிய பின் இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைக்கப்படுவர். அடையாள அட்டை சோதனைக்குப் பின் காத்திருப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இரத்த அழுத்தம், காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
2 முதல் 8 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்திய பிறகு 30 நிமிடம் கண்காணிப்பு அறையில் வைக்கப்படுவர். அதைத் தொடர்ந்து 28 நாட்களுக்குப் பிறகு அந்த நபருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும்.