உன்னாவ் வழக்கில் நீதி வேண்டி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டப்பேரவை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்குள்ளான உன்னாவ் இளம்பெண் 40 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என கூறி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது மிகவும் கொடூரமான சம்பவம். இது ஒரு கருப்பு நாள். இந்த பாஜக அரசின் கீழ் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன்முறை அல்ல. சட்டசபையில், 'குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்' என முதல்வர் கூறினார். ஆனால் அவரால் ஒரு மகளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. உத்தரபிரதேச முதலமைச்சர், மாநில உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ராஜினாமா செய்யாத நாள் வரை, நீதி நிலைநாட்டப்படாது. உன்னாவ் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நாளை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என தெரிவித்தார்.