தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கடந்த ஆண்டு முதலே திட்டமிட்டுவருகிறது மத்திய அரசு. கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தொழிலாளர்கள் நலச் சட்டத்தின்படி தொழிலாளர்கள் வாரத்திற்கு 6 நாட்களும் ஒரு நாளைக்கு 8 மணி நேரமும் வேலை பார்த்துவருகிறார்கள். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு, ஒருநாளைக்கு 12 மணி நேரம் என்ற அளவுகோலில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்! மற்ற 3 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்பதே புதிய திட்டத்தின் ஷரத்துகள்.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தில் இதற்கான விதிமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தொழிலாளர் நலத்துறையினர், “தொழிலாளர் நலச் சட்டத்தில் புதிய விதிகளைக் கொண்டுவருகிறது மத்திய அரசு. வாரத்தில் வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கை 4 ஆகவும், வேலை செய்யும் நேரம் தினமும் 12 மணிநேரமாகவும் வைக்கலாம்; மற்ற 3 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்களாக அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர்.
தினமும் 8 மணி நேரம், வாரத்திற்கு 6 நாட்கள் எனும்போது, மொத்த உழைப்பின் நேரம் 48 மணி நேரம் வருகிறது. அதையே தினமும் 12 மணி நேரம் என 4 நாட்களுக்கு உழைக்கும்போது அதே 48 மணி நேரம்தான் வருகிறது. ஆனால், பணி செய்யும் நேரத்தின் அளவு கூடும்போது பணிகள் முடிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை குறைகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்குவரும் என தெரிகிறது” என்கிறார்கள்.