Skip to main content

“பணியாளருக்கு அழைப்பு...பிரதமருக்கு இல்லை” - சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்

Published on 13/01/2025 | Edited on 13/01/2025
Subramanian Swamy taunts Trump's inauguration

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தான் பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார். 

டொனால்ட் டிரம்ப்போடு, ஜே.டி.வானஸ் என்பவர் துணை அதிபராக வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். உலகின் தலைசிறந்த நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அந்த வகையில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இருக்கிறார்.

இது தொடர்பாக  வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ஜே டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்பார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்காளுடன் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழாவில் ‘இந்தியா அழைக்கப்பட்டுள்ளது’ என்று இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து என் அமெரிக்க நண்பர்கள் சிரிக்கிறார்கள். வெயிட்டர்(Waiter) அழைக்கப்பட்டுள்ளார், ஆனால் பிரதமர் அழைக்கப்படவில்லை!! இது இன்னும் பெரிய அவமானம் இல்லையா?” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்