மத்தியப் பிரதேச மாநிலத்தில் கேபினட் அமைச்சருக்கு நிகராக, ‘பரசுராம் கல்யான்’ என்ற பிராமண வாரியத்தின் தலைவர் பதவி உள்ளது. இந்த வாரியத்தின் தலைவராக பண்டிட் விஷ்ணு ரஜோரியா என்பவர் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். குறைந்தது 4 குழந்தைகளாவது பெற முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என இவர் பேசி சர்ச்சியை கிளப்பியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பண்டிட் விஷ்ணு ரஜோரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை பெரும்பாலும் நிறுத்திவிட்டதால் மதவெறியர்களின்" எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. வயதானவர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. கவனமாகக் கேளுங்கள், எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு. இளைஞர்கள் ஒரு குழந்தையைப் பெற்று செட்டில் ஆகிறார்கள். இது மிகவும் சிக்கலானது. குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளுமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நான்கு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ரூ.1 லட்சம் விருதை வழங்கும். நான் வாரியத் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், விருது வழங்கப்படும். கல்வி இப்போது விலை உயர்ந்ததாக மாறிவிட்டது இளைஞர்கள் அடிக்கடி என்னிடம் கூறுகின்றனர். எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள், ஆனால் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பின்வாங்காதீர்கள். இல்லையெனில், மதவெறியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றுவார்கள்” என்று கூறினார். இவரது பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.