Skip to main content

‘ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது’ - வாகன ஓட்டிகளுக்கு புதிய உத்தரவு!

Published on 13/01/2025 | Edited on 13/01/2025
Uttar pradesh government order for motorists at No petrol if don't wear a helmet

ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நாராயண் சிங், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்த மாத தொடக்கத்தில் மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மதிப்பாய்வின் போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சாலை விபத்துகளால் மாநிலத்தில் ஆண்டுதோறும் 25,000-26000 உயிர்கள் இழக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் பெரும்பாலான இறப்புகள் ஹெல்மெட் பயன்படுத்தாததால் ஏற்படுகின்றன. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொள்கை உயிர்களைக் காப்பாற்றுவதையும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி 2019 ஆம் ஆண்டு கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அவ்வப்போது மட்டுமே செயல்படுத்தப்பட்டது. எனவே, புதிய உத்தரவு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விதியை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.  மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் உத்தரப் பிரதேச மோட்டார் வாகன விதிகள், 1998 இன் தொடர்புடைய விதிகள் குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்தக் கொள்கையின் வெற்றிக்கு காவல்துறை மற்றும் பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களுடன் வழக்கமான ஒருங்கிணைப்பு அவசியம்.

பெட்ரோல் நிலையங்களில், ‘தலைக்கவசம் இல்லையென்றால், எரிபொருள் இல்லை’ என்ற வாசகங்கள் கொண்ட முக்கிய பலகைகள் பொருத்தப்பட வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். சமூக ஊடக தளங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பிரச்சாரங்கள் சட்டப்பூர்வ தேவையாக மட்டுமல்லாமல், உயிர்காக்கும் சாதனங்களாக ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்