தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நாளை (14.01.2025) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக கடந்த 10ஆம் தேதி (10/01/2025) முதல் இன்று (13/01/2025) வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 5 ஆயிரத்து 736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று பிற ஊர்களிலிருந்து இந்த 4 நாட்களுக்கு 7 ஆயிரத்து 800 சிறப்புப் பேருந்துகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 904 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக நாளை மறுநாள் (15/01/2025) முதல் 19ஆம் தேதி (19/01/2025) வரையில், தினசரி இயக்கக் கூடிய 10 ஆயிரத்து 460 பேருந்துகளுடன் 5 ஆயிரத்து 290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6 ஆயிரத்து 926 என ஆக மொத்தம் 22 ஆயிரத்து 676 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று இரவு கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.