தமிழ்நாட்டின் கலை பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், உள்ளிட்ட 18 இடங்களில் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சி நாளை (14.01.2025) முதல் 17 ஆம் தேதி வரை (17.01.2025) வரை நான்கு நாட்கள் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை மேளம் அடித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.01.2025) தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்திய மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டனர்.
அதே போன்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பரந்தாமன், நா. எழிலன், வி.ஜி. ராஜேந்திரன், த. வேலு, திரு.எம்.கே. மோகன். துணை மேயர் மு. மகேஷ் குமார் எனப் பலரும் கலந்துகொண்டனர். மேலும் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.