கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை, ஏற்றுக் கொண்டதை நிராகரிக்க வேண்டும் என அதிமுக எடப்பாடி தரப்பு புகாரளித்தது. கட்சியின் அங்கீகாரம் இல்லாத வேட்பாளர்கள் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது சட்ட விரோதம். எனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்ற நிலையில் நேற்றே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அன்பரசன் என்ற வேட்பாளர் தற்பொழுது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியிருந்ததையொட்டி அதிமுக தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் பாஜகவில் மாநில நிர்வாகிகள் சொல்வது எங்களுக்கு பொருட்டல்ல நாங்கள் தேசிய தலைமையுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்து வந்தனர். அதேநேரம் கர்நாடக புலிகேசி தொகுதியில் அதிமுக வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுக பாஜக இடையே போட்டி நிலவியது. இதனால் பாஜகவை எதிர்க்க தயாராகிறது அதிமுக என்ற பிம்பம் உருவாகிய நிலையில் தற்போது திடீரென அதிமுக வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். விசாரித்ததில் பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் மனு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.