மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் கடந்த 8 ஆம் தேதி மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற போது மக்களவையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர். அதன் பின்னர் நேற்று மாலை பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை புரிந்தார். பிரதமர் மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து யாரும் குரல் கொடுக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் அவையிலிருந்த அனைவரும் குரல் எழுப்பினர். குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒட்டுமொத்தமாகத் தோல்வியில் முடிந்தது என அறிவிக்கப்பட்டது.
மேலும், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று அவையில் மீண்டும் மீண்டும் விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணியின் 23 கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அம்பேத்கர் சிலை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி மேற்கொண்டனர்.