அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் முறைக்கு திரும்பி வருவதாக, நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TATA CONSULTACY SERVICES) தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 20% பணியாளர்கள் அலுவலகம் வந்து பணிபுரிவதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், முதல் காலாண்டில் ரூபாய் 9,519 கோடியாக உயர்ந்துள்ளது நிறுவனத்தின் காலாண்டு லாபம். கரோனா காரணமாக, தொழில் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை என்ற முறைக்கு மாறிய நிலையில், தற்போது மீண்டும் பழைய படி, அலுவலக வேலை முறைக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சென்னை, கோவை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளைகளை அமைத்துள்ள டிசிஎஸ் நிறுவனம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகளை அமைத்து, லாபகரமாக இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் டிசிஎஸ். நிறுவனம் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.