பயிற்சி தேர்வில் தோல்வியடைந்ததால், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு 18 வயது பொறியியல் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், கோராக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதிதி மிஸ்ரா (18). பொறியியல் மாணவியான இவர், விடுதியில் தங்கி கடந்த இரண்டு வருடங்களாக ஜே.இ.இ. எனும் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். அதன்படி, சில தினங்களுக்கு முன்பு, வெளியான ஜே.இ.இ தேர்வு முடிவில் அதிதி மிஸ்ரா தோல்வியடைந்துள்ளார். இதனால், அதிதி மிஸ்ரா மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (12-02-25) வெளியே சென்ற அறை தோழி, திரும்பி வந்துள்ளார். அப்போது, அறை கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அதில், அதிதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அறை தோழி, உடனடியாக விடுதி காப்பாளரிடம் தகவல் கொடுத்தார். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அதிதி மிஸ்ராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அறையை சோதனை செய்ததில், தற்கொலை செய்வதற்கு முன்பு அதிதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், ‘அப்பா, அம்மா என்னை மன்னியுங்கள், என்னால் அதைச் செய்ய முடியவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது நமது உறவின் முடிவு... நீங்கள் அழ வேண்டாம்... நீங்கள் எனக்கு நிறைய அன்பை கொடுத்தீர்கள். உங்கள் கனவுகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் சோட்டியை கவனித்துக் கொள்ளுங்கள். அவள் நிச்சயமாக உங்கள் கனவுகளை நிறைவேற்றுவாள். உங்கள் அன்பு மகள் - அதிதி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.