மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆறு மாதங்களுக்கு மேலாக அவர்கள் போராட்டம் தொடர்ந்துவருகிறது. விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசோ சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
விவசாயிகளும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த 26ஆம் தேதி, தங்கள் போராட்டம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, அன்றைய நாளை கருப்பு தினமாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து தங்கள் போராட்டம் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, விவசாயிகள் இன்றைய நாளை விவசாயத்தைக் காப்பாற்றும் தினமாகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில மாநிலங்களில் ஆளுநரிடம் மனுக்களை கொடுக்க முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதோடு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு ட்ராக்டர் பேரணிகளையும் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகைத், "இன்றைய கூட்டத்தில், எங்கள் இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் இரண்டு பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்; ஜூலை 9 ஆம் தேதி ஒரு டிராக்டர் பேரணி நடைபெறும், அதில் ஷாம்லி மற்றும் பக்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். அந்த பேரணி ஜூலை 10 ஆம் தேதி சிங்கு எல்லையை எட்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "மற்றொரு பேரணி ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும், அதில் பிஜ்னோர் மற்றும் மீரட் மக்கள் கலந்து கொள்வார்கள். ஜூலை 24 ஆம் தேதி இரவு, அவர்கள் மீரட் சுங்கச்சாவடியில் தங்குவார்கள். ஜூலை 25 ஆம் தேதி அவர்கள் இங்கு (டெல்லி-காசிப்பூர்) வந்து சேருவார்கள்" என தெரிவித்துள்ளார்.