நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (20.05.2024) காலை 07.00 மணிக்குத் தொடங்கியது. 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும் என ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிராக் பாஸ்வான் உள்ளிட்ட 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
அதே சமயம் ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக முதல் கட்டமாக 28 இடங்களுக்குக் கடந்த 13 ஆம் தேதி 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.