ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
இந்தியாவும் இராணுவ விமானங்கள் மூலம் காபூல் விமான நிலையத்திலிருந்து, இந்தியர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துவருகிறது. இந்தநிலையில், காபூல் விமான நிலையத்திற்கு அருகே 150க்கும் மேற்பட்டவர்கள் தலிபான்களால் கடத்தப்பட்டதாகவும், கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியானது.
ஆனால் தலிபான் செய்தி தொடர்பாளர் அஹ்மதுல்லா வசேக் இதனை மறுத்தார். இந்தநிலையில், தலிபான்கள் கடத்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், அவர்களது பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்ததாகவும், பின்னர் கடத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்குள் வந்துவிட்டதாகவும், அவர்கள் அங்கிருந்து விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.