
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அங்கூர் ஆர் ஜஹாகிர்தார், வீட்டு வன்கொடுமை வழக்கை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து நீதிபதி மத்தியஸ்தம் செய்ததாக வழக்கறிஞர் அங்கூர் ஆர் ஜஹாகிர்தார் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பக்கமான லிங்கிட்இன் பக்கத்தில் வழக்கறிஞர் அங்கூர் ஆர் ஜஹாகிர்தார் வெளியிட்ட பதிவில், ‘குடும்ப வன்முறை வழக்கில் மத்தியஸ்தம் செய்ய நீதிபதி முன்பு தம்பதியினர் ஆஜராகினார். அப்போது அந்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ‘நீங்கள் தாலியையும் அணியவில்லை, குங்குமமும் வைக்கவில்லை என்பதை நான் பார்க்கிறேன். நீங்கள் திருமணமான பெண் போல் நடந்து கொள்ளவில்லை என்றால், உங்கள் கணவர் ஏன் உங்கள் மீது ஈடுபாட்டோடு இருக்க வேண்டும்?’ என்று மத்தியஸ்தம் செய்தார்.
நீதிபதிகளின் அநாகரீகமான கருத்துக்கள் குறித்து புகார்களை எழுப்ப எந்த வழியும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. மாவட்ட நீதிமன்றங்களில் பகுத்தறிவு சிந்தனை கொண்ட எந்தவொரு படித்த நபரின் மனசாட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல விஷயங்கள் நடக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, நமது சமூகம் சில மூர்க்கத்தனமான விஷயங்களுக்கு ஒரு அடிப்படை சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்’ என்று வேதனையோடு அந்த பதிவை வழக்கறிஞர் ஜஹாகிர்தார் பகிர்ந்துள்ளார்.