டெல்லி சுந்தர் நகரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வஜித். இவருக்கு முகமது இஸ்ரார் (வயது 26) என்ற மகன் உள்ளார். மேலும் முகமது இஸ்ரார் சற்று மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் முகமது இஸ்ரார் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் இருந்து அதிகாலையில் வெளியே சென்ற முகமது இஸ்ரார், நீண்ட நேரமாக வீட்டிற்குத் திரும்பவில்லை. அதன் பின்னர் ஒரு ஆட்டோவில் உடல் முழுவதும் பலத்த காயங்களோடு சிலர் இஸ்ராரை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் முகமது இஸ்ராரை சிலர் மின் கம்பத்தில் கட்டி வைத்துக் கொடூரமாகத் தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் உடல் முழுவதும் காயங்களுடன் வலியால் துடித்த முகமது இஸ்ரார், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முகமது இஸ்ரார் தந்தை அப்துல் வஜித் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முகமது இஸ்ரார் கோவில் பிரசாதத்தை உண்டதாகக் குற்றம்சாட்டி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாகப் போலீசார் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர். கோயில் பிரசாதத்தை உண்டதாகக் கூறி மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.