Skip to main content

ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைக்கவில்லை: தமிழிசை

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
tamilisai

ரஜினி பேசும் அதே பேச்சை தான் நாங்கள் பேசுகிறோம், ஆனால் ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அவரவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் மாற்று சக்தியாக பாஜக தான் வரும் என நாங்கள் சொல்கிறோம். வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ரஜினி சொல்கிறார். ஒவ்வொருவரின் செயல்பாட்டை பார்த்து மக்கள் அவர்கள் முடிவை எடுப்பார்கள். எங்களை பொருத்தவரையில் இன்று நாங்கள் பல மாநிலங்களில் நல்லாட்சி கொடுத்து வருகிறோம்.

அதே நல்லாட்சியை, தமிழகத்திற்கு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாங்கள் மாற்று சக்தியாக வரமுடியும் என்று சொல்கிறோம். ஒரு தலைவராக வெற்றிடம் இருக்கும் இடத்தை நிறப்ப முடியும் என்று அவர் நினைக்கிறார். நம்பிக்கை தான் வாழ்க்கை. எல்லோரும் நம்புவோம். மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். அனைவரின் நோக்கமும் மக்கள் நலனாகதான் இருக்கிறது. யாரை ஆதரிப்பது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அவரவர் பணியை அவரவர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் யாரும் சரிசெய்யவில்லை. தாங்கள் தான் சரிசெய்வோம் என்ற தொனி யாருக்கும் சரியாக இருக்காது. நாங்கள் ஒருவகையான வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம். திராவிட கட்சிகளை சார்ந்தவர்கள் ஒருவகையான வேலைகளை செய்து கொண்டிருகிறார்கள். எல்லோரும் அரசியலில் தான் இருந்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், ’ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை’. இதே பேச்சை தான் நாங்கள் பேசுகிறோம். மக்களுக்காக எடுத்துச்சொல்கிறோம். ’ஒரு மணி நேரம் ரஜினி பேசுவது முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது. பத்திரிக்கைகளில் ஒருவார்த்தைக்கூட விடாமல் அது பதிவு செய்யப்படுகிறது’. ஆனால் அதே பதிவை மற்ற தலைவர்கள் சொல்லும் போது இந்த அளவிற்கு பதிவு செய்யப்படுவதில்லை. திரைப்படத்துறையினருக்கு அந்த வாய்ப்புகள் அதிகம். எல்லோரும் தெளிவான நடைபோடட்டும். பின்னர் மக்கள் எடைபோடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்