
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ''எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அண்மையில் தான் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதற்கு பின்னர் பாஜகவினுடைய சில கொள்கைகளை எல்லாம் விமர்சித்துப் பேசினார். ஆனால் திடீரென அவர் டெல்லிக்கு சென்றதும், அவருக்கு பின் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் இரண்டு முறை டெல்லிக்கு சென்றதும் தெரிந்தது.
அதற்குப் பிறகு அமித்ஷா இங்கே வருவதாக அறிவிப்பு வந்தது. இங்கு வந்த அமித்ஷா, கூட்டணி அரசு அமைக்கப் போகிறோம். அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொன்னார். ஆனால் இந்த அறிவிப்புக்கு முன்னர் மாநில முதல்வராக இருந்த அதிமுகவின் இன்றைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தன் தலைமையில் கூட்டணி அமைகிறது என்று சொன்னால் ஐந்து நிமிடமாவது வரவேற்று முறைப்படி அதிமுக பேசியதற்கு பிறகு பாஜக பேசினால் அது கூட்டணிக்கு ஆரோக்கியமானதாகவும் ஒரு உண்மையான கூட்டணியாகவும் தெரியும். எடப்பாடி பழனிசாமி மவுனசாமி போல பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டு முழுவதையும் அமித்ஷாவே பேசியுள்ளார். சில கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு சாதகமாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
எக்காரணத்தைக் கொண்டும் பிஜேபியோடு சேர மாட்டோம் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி இப்பொழுது இப்படி திடீரென முடிவெடுத்து அறிவித்திருக்கும் இந்த கூட்டணி நிலைக்குமா நீடிக்குமா? அல்லது நான்கு மாதத்திற்குள் அவர்களுக்குள்ளேயே ஒரு கருத்து வேறுபாடு உருவாகி குலையுமா என எதுவுமே தெரியாது. ஆனால் அவர்கள் பாஜகவிற்கு எடுபிடிபோல இருந்து கொண்டுதான் நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்களே தவிர அதிமுகவிலிருந்து ஒரு வார்த்தை கூட யாரும் பேசவே இல்லை. ஆகவே இந்த கூட்டணியை பொருத்தமட்டில் அவர்கள் கூட்டணி நீடித்தாலும் சரி, நீடிக்காவிட்டாலும் சரி, அல்லது இன்னும் ஒன்று இரண்டு கட்சிகளை இன்னும் கூடுதலாக சேர்த்துக் கொண்டு பெரிய பலமான கூட்டணி என்று சொன்னாலும் சரி திமுகவின் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய பெறும்'' என்றார்.