
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை, இன்று (02-04-25) மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு, திமுக, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணிகள் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் மக்களவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் மீது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, “வக்ஃப் ஒரு அரபிக் வார்த்தை. வக்ஃப் என்பது அல்லாஹ்வின் பெயரில் சொத்துக்களை தானம் செய்வது என்று பொருள். வக்ஃப் என்பது ஒரு தொண்டு நிறுவனம். மற்றவர்களின் சொத்துக்களை நான் தானம் செய்ய மாட்டேன். உங்களுடைய சொத்துக்கள் எதுவாக இருந்தாலும் தானம் செய்யுங்கள். வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு அனுமதி இல்லை. இந்த திருத்தச் சட்ட மசோதாவால், இரண்டு மதங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தாது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல. சிறுபான்மையினரை தவறாக வழிநடத்த சில பேர் முயற்சிக்கிறார்கள். இந்த வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் மத சொத்துக்களை பராமரிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். நாங்கள் அதில் தலையிடக் கூட விரும்பவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை பயமுறுத்தி தங்களுடைய வாக்கு வங்கிகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் பரிஷத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருப்பார்கள்.
இஸ்லாம் மத கொள்கையில் இருந்து வக்ஃப் உருவானது. முஸ்லிம்கள் அல்லாதவர்கள் உங்கள் வக்ஃபுக்குள் நுழைய மாட்டார்கள் என்பதை நான் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். எல்லாம் நன்றாக இருந்தது. காங்கிரஸ் 2013இல் ஒரு திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் காரணமாக லுட்யன்ஸ் சொத்தில் உள்ள 123 சொத்துக்கள் வக்ஃபுக்குச் சென்றன. அவர்கள் அரசு நிலத்தை கையகப்படுத்தத் தொடங்கினர். காங்கிரஸ் இதை திருப்திப்படுத்தும் அரசியலுக்காகச் செய்தது. தமிழ்நாட்டில், 400 ஆண்டு பழமையான கோயில் சொத்துக்கள் வக்ஃபுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.