Skip to main content

ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018
Trudeau


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்த அவர், ஒரு வாரம் நாடு முழுவதும் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

டெல்லி தாஜ்மகால், சபர்மதி ஆசிரமம், அமிர்தசரஸ் பொற்கோயில் என இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களுக்கும் குடும்பத்தினருடன் இந்திய பாரம்பரிய உடைகளில் சென்று சுற்றிப் பார்த்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வந்திருக்கும் கனடா நாட்டு பிரதமரை, பிரதமர் மோடி இதுவரை சந்திக்காதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெரும்பாலும் உலக நாடுகளின் தலைவர்களுடன் நட்புறவோடு பழகும் பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஷ்டின் ட்ரூடோவை பற்றி ட்விட்டரில் கூட நேற்று வரை வாய்திறக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இப்படி, பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்.

இந்தியா - கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக  ட்ரூடோவுடன் பேச உள்ளேன். நமது இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அவர் அளிக்கும் ஆழமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்