ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரில் அமைய இருக்கும் முதல் இந்துக் கோவிலுக்கு இந்தியப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
2015ஆம் ஆண்டிற்குப் பின் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. அந்தக் கூட்டமைப்பின் தலைநகரான அபுதாபியில் அமையப் பெறவுள்ள பிரம்மாண்ட இந்துக் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அந்த விழாவைத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் அரபு நாட்டு அரசர் முகமது பின் ஜயீத் அல் நயானும் கலந்துகொண்டார்.
சுமார் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்தக் கோவில், முழுக்கமுழுக்க கற்சிற்ப வேலைப்பாடுகளால் ஆனது. வரும் 2020ஆம் ஆண்டு இந்தக் கோவிலின் வேலைப்பாடுகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் சிற்ப வேலைப்பாடுகளுக்காக இந்தியாவைச் சேர்ந்த தலைசிறந்த சிற்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அபுதாபியில் 30 லட்சம் இந்தியர்கள் குடியிருக்கின்றனர். பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த விழாவின் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகின. அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘கட்டிடக்கலை மற்றும் சிறப்புகள் மட்டுமின்றி இந்தக் கோவில் உலக மக்கள் அனைவருக்குமான நற்செய்தியாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.