திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (16.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், சென்னை வடக்கு மாவட்டம், தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் ப.மதிவாணன் தி.மு.க.வில் இணைந்தார். அதன்போது சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் மதிவாணன். மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டவர் திமுகவிற்கு சென்றது தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
''விஜயகாந்த் மீது மரியாதை வைத்திருந்ததால் தேமுதிகவில் பணியாற்றி வந்தேன். தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நோக்கம் திசை மாறியுள்ளது. கட்சியில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் கட்சித் தலைவரான விஜயகாந்த்க்கு தெரியுமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் திமுகவில் சேருவார்கள். விரைவில் வடசென்னை மாவட்ட தேமுதிக கட்சி தொண்டர்கள் திமுகவில் இணைய இருக்கின்றனர்'' எனத் தெரிவித்தார் மதிவாணன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தேமுதிகவில் இதேபோல்தான் மாவட்டச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் சிலர் கட்சி மேல் சில குறைகளைத் தெரிவித்து வெளியேறினார்கள். தற்போது சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர் ஒருவர் தேமுதிகவிலிருந்து வெளியேறியிருப்பதால் அதிர்ச்சியில் உள்ளனர் தேமுதிக தொண்டர்கள். நிர்வாகிகளை அனுசரித்து ஒன்றிணைக்காவிட்டால் கடந்த சட்டமன்றத் தேர்தல்போல் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தலைமைக்கு தெரிவித்துள்ளனர் முக்கிய பொறுப்பாளர்கள். இதனால் அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை நிர்வாகிகள், தொண்டர்களை அரவணைக்குமாறு மாநில பொறுப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.