நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த குளிர்கால கூட்டத்தொடர் இன்று (20-12-24) நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான் விவாதம், அரசியலமைப்பு சிறப்பு விவாதம் போன்றவை நடைபெற்றது. மேலும், சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கு இரு அவைகளிலும் மறுப்பு தெரிவிப்பதால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சில தினங்களுக்கு முன்பு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில், அம்பானி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த ஜோல்னா பையை தூக்கி விநோத போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி பிரியங்கா காந்தி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஜோல்னா பை ஒன்றை கையில் ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்கு வந்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
அதனை தொடர்ந்து, வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களான இந்து மக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடந்த 17ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தி, ஜோல்னா பையை கொண்டு வந்தார். அந்த பையில், ‘வங்காளதேசத்தின் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்’ என எழுதப்பட்டிருந்தது. வயநாடு தொகுதியின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வங்கதேச விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரியங்கா காந்தி ஜோல்னா பைகளை கொண்டு வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், இன்று (20-12-24) காலை நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியிடம், 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கலவரத்தை சுட்டிக்காட்டும் வகையில் ‘1984’ என்று எழுதப்பட்ட கைப் பையை பா.ஜ.க எம்.பி அபராஜிதா சாரங்கி என்பவர் பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
அக்டோபர் 31, 1984 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.