திபேத்- நேபாளம் எல்லை பகுதியில் இன்று (07-01-25) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கின.
இதனை தொடர்ந்து, நேபாளம், திபெத், சீனா ஆகிய எல்லைப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால், அதில் பல பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வட இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசம், பூடான், நேபாளம், சீனாவிலும் இந்த நிலநடுக்கம் எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருக்கும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.