சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. சுதா கொங்கரா படம் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சிபி சக்ரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “நான் முன்னாடியே வரவேண்டியது. வெள்ள அபாய எச்சரிக்கை இருந்ததால் வரவில்லை. இதை முடித்துவிட்டு திருப்பரங்குன்றம், பழனி போன்ற கோயில்களுக்கு அடுத்தடுத்து போக இருக்கிறேன். அறுபடை வீடும் பார்க்க வேண்டும் என ஆசை. அதனால் தான் திருச்செந்தூருக்கு வந்திருக்கிறேன். அது போக அமரன் வெற்றிக்கு நன்றி சொல்வது கடமையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் நிறைய வேண்டுதலும் இருந்தது. அது எல்லாமே நல்ல படியாக முடித்து விட்டேன்” என்றார்.
பின்பு அவரிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலில் இந்த விஷயத்தை இங்கு பேச வேண்டாம் என மறுத்த சிவகார்த்திகேயன், பின்பு, “இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் எல்லாருடைய விருப்பமும். காவல் துறை நடவடிக்கை எடுக்கிறார்கள். அது சரியானது. இருந்தாலும் அதை விட முக்கியம், நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்க வேண்டும். அவர்களும் முழு தைரியத்துடன் இருக்க வேண்டும். இனி இதுபோல் நடக்காது என நம்புவோம். அதை கடவுளிடமும் நான் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.