செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐ.டி உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் பெருகி மக்கள் தொகையும் அதிகரித்து உள்ளது. அங்குள்ள பெரிய மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மயில், மான், உடும்பு போன்ற ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. இந்த சூழலில், அந்த மலை பகுதி முழுவதும் Archaeological survey of india, அதாவது இந்திய தொல்பொருள் ஆய்வின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்களை செய்யக்கூடாது என்பது விதி.
இந்த நிலையில், பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் என்பது, குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு அருகே உள்ள காலி இடத்தில் நாள்தோறும் சுமார் 58 டன் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றிவரும் கால்நடைகள் அங்கிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் நிலமை ஏற்படுகிறது. மேலும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் இறைச்சி கடைகளின் கழிவுகளை, ஊராட்சி வளாகத்தின் உள்ளே சென்று கொட்டி வருகின்றனர். இதனால் அந்த மலையடிவார பகுதி மிகப்பெரிய குப்பை கிடங்காக மாறி வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் சுற்றுவட்டார பகுதிகளில் துற்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்குள்ள BOLLINENI HILLSIDE APARTMENTS குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதற்கு, அவர்கள் இது செங்கல்பட்டு கலெக்டரின் உத்தரவு என பதில் கூறியுள்ளார்கள். ஆனால், வனத்துறையிடம் கேட்டபோது, தங்களுக்கு அப்படி எந்த உத்தரவும் வரவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து மனு அளித்தபோது, நாங்கள் இங்கு தற்காலிக குப்பை கிடங்கு மட்டுமே அமைத்திருக்கோம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த பிரச்சனை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்வதாக சொல்லப்படுகிறது. ஊராட்சி மன்ற நிர்வாகம் இதற்கு முன்பு இரண்டு முறை குப்பை கிடங்கு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அங்குள்ள குடியிருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த முயற்சி கைவிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரும்பாக்கம் ஏரிக்கரை பகுதியை குப்பை கிடங்காக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "எங்களுக்கு தேவையான குடிநீர் இந்த ஏரியில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. இந்த ஏரிக்கரை பகுதியை குப்பை கிடங்காக மாற்றினால் நிலத்தடி நீரும் இங்கு வாழும் உயிரினங்களும் அதிகளவில் பாதிக்கப்படும். பெரும்பாலான நாட்களில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் பாதி மட்டுமே குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.