ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.
கலாம் நினைவிடம், ராமேஸ்வரம் மீனவர்களுடன் கலந்துரையாடல், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய 3 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்ற கமல், தொடர்ந்து மதுரையில் நடக்கும் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்தார்.
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வருகை தந்தார்.
இதையடுத்து, இணைந்த கரங்களின் நடுவே நட்சத்திரத்துடன் கூடிய வெண்ணிற கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், ’நான் மக்களின் கருவி மட்டுமே தலைவன் அல்ல’. இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன்.
இந்த சோற்றுப் பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப் பாருங்கள், விரல் சுடும், இந்த சோற்றுப் பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும் என அவர் கூறியுள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், சோம்நாத் பார்தி, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.