நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அமித்ஷா பேசிய கருத்துக்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்திலும் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பியது தற்போது பேசுப்பொருளாகி உள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவியில் உள்ள கர்நாடகா சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பல்லாரி மற்றும் பிற பகுதிகளில் இருந்த மகப்பேறு இறப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாத்தில் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா பங்கேற்று பேசிக் கொண்டிருக்கையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹெச்.சி.பாலகிருச்ணா,அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, சட்டமன்றத்தில் இருந்த அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களின் கைகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தி, பா.ஜ.கவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து, சபை நடவடிக்கைகளை தொடர அனுமதிக்குமாறு சபாநாயகர் யு.டி.காதர் வலியுறுத்தினார். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு அமளி நிலவியது. இதையடுத்து, சபை தற்காலிமாக ஒத்திவைப்பதாக சபாநாயகர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களின் இருக்கைக்கு முன்பு அம்பேத்கர் புகைப்படத்தை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர். கர்நாடகா சட்டமன்றத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருக்கைகளில் அம்பேத்கர் புகைப்படம் மட்டும் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சித்தராமையா, இந்த விவகாரம் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், ‘அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால் நான் முதல்வராகும் பாக்கியம் கிடைத்திருக்காது. நான் எனது கிராமத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன். எங்கள் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வழிநடத்த உயர்ந்திருக்க மாட்டார். அவர் கலபுர்கியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்திருக்கலாம். நீங்கள் உங்கள் சொந்த ஊரில் ஒரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் நண்பர் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருக்கலாம். பாபாசாகேப்பின் பார்வைதான் நம் அனைவரையும் உயர்த்தியது. பிரதமர் கூட இதை ஒப்புக்கொள்ளலாம், நீங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர், நமக்கு வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நமது ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் கண்ணியத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.