காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177. 25 டிஎம்சி நீரை ஒதுக்கிட்டு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது, கர்நாடகாவில் குடிநீர் தேவை அதிகம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக 4.75 டிஎம்சி நீரை உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவில் குறையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களிடம் பேசிவிட்டு முழுமையான கருத்தை கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவுக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வந்துள்ளதால், கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கன்னட அமைப்புகள் இதைக் கொண்டாடி வருகின்றன. கர்நாடக ரக்ஷன வேதிகா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓசூரில் இனிப்பை வழங்கி இந்தத் தீர்ப்பைக் கொண்டாடினர்.
காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு பார்க்கக் கூடாது என தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதேபோல், உச்சநீதிமன்ற வளாகத்தில் பேசிய அதிமுக எம்.பி., நவநீத கிருஷ்ணன், தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. 10 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டது தமிழகத்திற்கு பின்னடைவு. இறுதி தீர்ப்பின்படி 192 டிஎம்சி தண்ணீர் போதாது. தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் மரணமடைகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
Published on 16/02/2018 | Edited on 16/02/2018