பிரபல இயக்குனரும் நடிகரும், இலட்சிய தி.மு.க கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர், தன்னுடைய அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கும், எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் 28 ஆம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன். இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள். சிம்புவுக்கு நான் ஃபாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு நான் காட் ஃபாதர்; சினிமாவை விட சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை’ என்றார்.
திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கிய டி.ராஜேந்தர், அக்கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகிய டி.ராஜேந்தர், அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் செய்து வரும் நிலையில், வரும் 28ஆம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருப்பது, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.