புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுபற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினர். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து 174 நாட்கள் நடந்தது. போராட்டம் தொடங்கி கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியோடு ஒரு வருடம் ஆகிவிட்டதால் இன்று நெடுவாசலில் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கக் கூடாது. மாவட்ட நிர்வாகம் அளிதத வாக்குறுதியின்படி ஓஎன்ஜிசி-ஆல் அமைக்கப்பட்ட சோதனை குழாய் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
நெடுவாசல் போராட்டம் - 100 கிராம மக்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி ஒப்பந்தம் வழங்கியது. இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் அடுத்த நாள் நெடுவாசல் கடைவீதியில் திரண்ட விவசாயிகள், மாணவர்கள், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடாத நிலையில் போராட்டம் வலுவடைந்து நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் போராட்டத்தை திருவிழாவாக நடத்தினார்கள். இந்த முதல்கட்ட போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரைத்துறையினர் என்று தினம் தினம் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்தது. அதே பொல நெடுவாசலை சுற்றியுள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 கிராம விவசாயிகள் விவசாய கருவிகள், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு வந்த அனைவரையும் நெடுவாசல் கிராமத்தார்கள் வரவேற்று உணவும் வழங்கினார்கள்.
தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையாலும் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது.
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு கிராமத்திலும் தொடர் போராட்டங்கள் நடந்தது. அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கணேஷ் 2017 டிசம்பர் இறுதிக்குள் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் அகற்றப்பட்டு விவசாயிகளிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் முடிந்த நிலையிலும் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு மற்றும் சுற்றுசூழல் அனுமதி கிடைத்த உடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளதால் நெடுவாசல் சுற்றியுள்ள கிராம மக்கள் மறு போராட்டத்திற்கு தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் கூடிய விவசாயிகள்.. நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்து மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்து அரசாரண வெளியிட வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தது போல அனைத்து ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளையும் அகற்றி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (18 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை) மாலை முதல் கட்ட போராட்டம் போல சுமார் 100 கிராம மக்களும், முதல் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரை துறையினரும் கலந்து கொள்ளும் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
போராட்டம் குறித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயி சுப்பிரமணியன் கூறும் போது.. என் நிலத்தை சுற்றியுள்ள சில விவசாயிகளின் நிலத்தை குத்தகைக்கு வாங்கிக் கொண்டு என் நிலத்தையும் கேட்டார்கள். கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு நிறை பணம் தருவதாக சில தரகர்கள் மூலம் பேசினார்கள் விவசாயம் செய்யும் நிலத்தை உயிர் இருக்கும் வரை கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்ட பிறகும் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கூட சிலர் நிலம் கேட்டார்கள் கொடுக்க மறுத்துவிட்டேன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் நிலத்தடி நீரை, விவசாயத்தை அளிக்கும் திட்டத்திற்கு இடம் கொடுக்க மாட்டேன். மீண்டும் போராட்டம் நடத்த கிராமம் கூடி முடிவெடுத்துள்ளது என்றார்.
அதே போல பெண் விவசாயி ஜெயந்தி.. எங்களுக்கு வாழ்வாதாரம் விவசாயம். அந்த விவசாயத்தை அழிக்க வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் கிராமத்தில் அனுமதிக்கமாட்டோம். முதலில் நடந்த எல்லா போராட்டதிலும் கலந்து கொண்டோம். மறுபடியும் நடக்கும் போராட்டத்திலும் கலந்து கொள்வோம் என்றார்.
-பகத்சிங்