காஞ்சிபுரத்தில் கூட்டத்தை முடித்து விட்டு கிளம்பிய தினகரன், "எடப்பாடி பழனிச்சாமி அ.ம.மு.க.வினரை எப்படியெல்லாம் பேரம் பேசினார் என்கிற ஆடியோ டேப் இருக்கிறது' என போகிற போக்கில் ஒரு தகவலை சொல்லிவிட்டுப் போனார். அந்த தகவல் அ.தி.மு.க. வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. இதுகுறித்து அ.ம.மு.க. வட்டாரத்தில் கேட்டபோது ஒன்றும் சொல்ல மறுக்கிறார்கள். ஆனால் தினகரனுக்கு நெருக்கமானவர்கள் பல தகவல்களை வாரி வழங்கினார்கள்.

"பொதுவாக அ.ம.மு.க.வில் இருப்பவர்களுக்கு "யார் பேசுவதையும் டேப் செய்யுங்கள்' என தினகரன் முன்பே ஒரு கட்டளையை பிறப்பித்திருக் கிறார். அதனால்தான் தங்க தமிழ்ச்செல்வன் தினகரனின் உதவியாளரான செல்லபாண்டிய னிடம் பேசியது டேப் ஆகி ஊடகங்களில் வெளிவந்தது. தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இந்த மூவர் இணைப்பு விவகாரம்தான் டேப் ஆக மாறியிருக்கிறது'' என அடித்துச் சொல்கிறார்கள் தினகரனின் ஆட்கள்.

இதில் அறந்தாங்கி ரத்தினசபாபதி வித்தியாசமானவர். சசிகலாவையும் தினகரனை யும் கட்சியை விட்டு நீக்குகிறோம் என எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அறிவித்த சமயத்தில் பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவாக நின்றார்கள். அவர்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். அதற்குப் பிறகு, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரில் ரத்தினசபாபதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டிக் கொண்டு வந்து எடப்பாடியை சந்திக்க வைக்கிறார். புதுக் கோட்டை மாவட்ட எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் ரத்தினசபாபதி விஜயபாஸ்கருக்கு நல்ல பழக்கம். அதனடிப்படையில் ரத்தின சபாபதியை அப்பொழுது அழைத்து வந்தார் விஜயபாஸ்கர்.

உடனே தினகரன் அழைக்க அடுத்தநாளே, தினகரனை போய் சந்தித்து எடப்பாடி வயிற்றில் புளியை கரைத்தவர். அந்த ரத்தினசபாபதிக்கு சபாநாயகர், தகுதி நீக்க உத்தரவு பிறப்பித்தபோது, "என்னை தகுதி நீக்கம் செய்யச் சொல்லும் சபாநாயகரின் நாக்கை அறுப்பேன்' என முழங்கினார். ஆனாலும், காலப்போக்கில் தினகரனிடம் ஒட்டாமலே இருந்தார். "என்னை எம்.எல்.ஏ. ஆக்குனது சின்னம்மா' என்கிற டயலாக்கோடு தினகரன் ஆதரவாளராக இருந்த இவரிடம் தினகரனும் பெரிதாக ஒட்டவில்லை. பதவி நீக்கத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ரத்தினசபாபதியும் விருத்தாசலம் கலைச்செல்வனும்தான் வழக்கு போட்டார்கள். அதுவும் தினகரனை கேட்காமல் போட்டார்கள். தினகரன் வழக்கு போட வேண்டாமென சொல்வார். அதை கேட்க முடியாது' என இருவரும் மறுதலித்தனர். சுப்ரீம் கோர்ட் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை என சொன்னதும் தினகரன் அவருக்கு நெருக்கமான கள்ளக்குறிச்சி பிரபு எம்.எல். ஏ.வையும் மனு போட வைத்து அந்தத் தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என இணைப்பு தீர்ப்பை பெற்றார். எனவே ரத்தினசபாபதியும் கலைச்செல்வ னும் அ.தி.மு.க.வில் இணைந்தது ஆச்சரியமில்லை. கள்ளக்குறிச்சி பிரபு அ.தி.மு.க.வில் இணைந்ததில் தான் தினகரனுக்கு கேசட் சிக்கியிருக்கும் என சொல்லும் தினகரன் ஆட்கள் அதற்கு பின்னணியாக ஒரு கதையையும் சொல்கிறார்கள்.
பிரபுவின் அப்பா அ.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளராக எடப்பாடி அணியில் இருக்கிறார். பிரபுவுக்கு இன்னமும் திருமணம் கூட ஆகவில்லை. அ.தி.மு.க. ஒ.செ.வாக இருக்கும் அப்பா பெரிய பங்களா வீட்டையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் சம்பாதித்திருக்கிறார். "நீ ஒழுங்காக எடப்பாடி அணிக்கு வந்துவிடு' என்பதுதான் அப்பாவின் வேண்டுகோள். டி.டி.வி. தினகரனோடு ஏற்பட்ட நெருக்கத்தால் அப்பா வின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் இருந்த பிரபுவை தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. அணிக்கு அழைத்து வர எடப்பாடி கடுமையாக முயற்சி செய்தார். முதலில் அவரது சமுதாய எம்.எல்.ஏ.க்களை அனுப்பினார். அதற்கு பிரபு மசியவில்லை என்றதும், பலவீனங்களை அறிந்து காய்நகர்த்தும் தி.நகர் எம்.எல்.ஏ.வான சத்யாவை களமிறக்கினார். சத்யாவும் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.வான விருகை ரவியும் சேர்ந்து பிரபுவின் தோள்மேல் கைபோட்டு அழைத்துச் செல்லும் படம் நக்கீரன் உட்பட மீடியாக்களிலும் சமூக வலைத்தளங் களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கும் மசியாத பிரபு தினகரனை தொடர்பு கொண்டு பேசினார். "நான் அ.தி.மு.க.வுக்கு செல்லவில்லை என்றால் என்னை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து விடுவார்கள்' என வருத்தப்பட்ட பிரபுவின் கோரிக்கையை ஏற்று "சில காரியங்களை செய்து கொடுத்து விட்டு போ' என தினகரன் சொன்னார். அதற்குப்பிறகுதான் பிரபு போய் எடப்பாடியை சந்தித்தார் என்கிறார்கள் பிரபுவை நன்கு அறிந்தவர்கள்.
ஏற்கனவே ஓ.பி.எஸ். தினகரனை வந்து சந்தித்ததை ரகசிய கேமராக்களில் பதிவு செய்து வைத்து "தினகரனை ஓ.பி.எஸ். சந்தித்தார்' என சொன்ன தங்க தமிழ்ச்செல்வனின் கருத்தை ஓ.பி.எஸ்.சால் மறுக்க முடியவில்லை. அதே தங்க தமிழ்ச்செல்வன் கோபமாக தினகரனை பற்றி கூறிய கருத்துக்களை ஒலிப்பதிவாக தினகரன் வெளியிட, அவரால் மறுக்க முடியவில்லை, தற்பொழுது எடப்பாடி பேசும் பேச்சை தினகரன் வெளியிடும் போது என்ன ஆகும் என சொல்ல முடியாது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். ஜெ.விற்கு பிறகு நான்தான்' என அரசியலில் தன்னை நிலைநாட்ட நினைத்து செயல்படும் எடப்பாடிக்கு இந்த கேசட் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் சசிகலா தலைமையில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற திவாகரனின் முயற்சிக்கு வெடிகுண்டாகவே அமையும் என பீதியோடு காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க. ர.ர.க்கள்.