Skip to main content

“பெரியார் மட்டும்தான் போராடினாரா.? தமிழ்நாட்டின் வரலாறு திராவிட கட்சிகளின் வருகைக்கு பிறகுதானா..?” - சீமான் கேள்வி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

vc

 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசின் நடவடிக்கைகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் "ஃபோர்டு கம்பெனி இந்தியாவை விட்டு செல்வதைப் பற்றி பேசுகிறார்கள். ஏற்கனவே பல்வேறு ஆலைகள் இந்தியாவை விட்டு சென்றுள்ளன. நான் சிறையில் இருந்தபோது இதே மாதிரியாக கம்பெனியில் ஊதியம், பணி உயர்வு கேட்டுப் போராடிய வழக்கில் நூற்றுக்கணக்கானவர்கள் என்னுடன் சிறையில் இருந்தார்கள். அவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. இந்தக் கம்பெனிகள் எல்லாம் அவர்கள் தேவை முடிந்ததும் கிளம்பிவிடுகிறார்கள். அலுவலகம் இருக்கும் இடங்களில் தண்ணீர் கிடைக்கும்வரை அலுவலகத்தை நடத்துகிறார்கள்; இல்லை என்றதும் ஓடிவிடுகிறார்கள். இந்த ஃபோர்டு விஷயத்திலும் இதேதான் நடந்துவருகிறது. 

 

இதில் மத்திய அரசு மக்கள் நலம் சார்ந்து சிந்திப்பது இல்லை. அவர்கள் போடும் ஒப்பந்தமே இதற்கு சாட்சி. அதாவது இவர்கள் மின்சாரம் உள்ளிட்ட இடையூறுகளால் அந்த அலுவலகம் ஒருமணி நேரம் செயல்படாவிட்டால் கூட அந்த இழப்பை அரசு ஈடுசெய்யும் என்று ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால், இவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை. 1 டன் எடையுள்ள கார் தயாரிக்க 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறுகிறார்கள். ஆனால் தற்போது மூன்று டன் எடை வரைக்கும் கார்கள் தயாரிக்கிறார்கள். அந்தக் கார்காரன் நம்ம நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று மாதா கோயிலிலோ அல்லது மாரியாத்தா கோயிலிலோ வேண்டிக்கொண்டு வரவில்லை. யார் எப்படி போனால் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்கும். இதையெல்லாம் நாங்கள் பேசினோம் என்றால் எங்களை தேசவிரோதிகள் என்கிறார்கள். இதை எங்கே போய் சொல்ல முடியும்.

 

இன்றைக்கு ஆளுங்கட்சியால் பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. பெரியார் போராடினார் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பெரியார் மட்டுமே போராடினார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை. எத்தனையோ போராட்டங்களை எங்கள் தாத்தா, பாட்டன்கள் எல்லாம் நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆகையால் திராவிட கட்சிகள் வந்த பிறகுதான் வளர்ச்சி, மீட்சி என்ற கதை விடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் பாரம்பரியம் பல ஆயிரம் வருடங்களைக் கொண்டது. அதனை 50 ஆண்டுகளில் சுருக்க இவர்கள் முயல்கிறார்கள்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் எங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளோம். விருப்ப மனுக்களைக் கட்சியினர் வழங்கிவருகிறார்கள். விரைவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்" என்றார்.