1962 தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்தவுடன் மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அண்ணா வெற்றிபெற்றார்.
இந்தியா மீது சீனா போர் தொடங்க தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. திமுகவோ திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
திராவிடநாடு கோரிக்கை குறித்து மக்களவையில் பேசிய பிரதமர் நேரு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். திமுகவை பிரிவினைவாத கட்சி என்றும், அந்தக் கோரிக்கையை ஒடுக்க ஒரு யுத்தத்தை வேண்டுமானாலும் நடத்தத் தயார் என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.
அவருடைய அந்தப் பேச்சின் விவரத்தை பெற்ற அண்ணா, மாநிலங்களவையில் நேருவுக்கு பதில் அளித்து பேசினார்.
“இதனால் ஒரு போரே என்றாலும் அந்தப் போர் வரட்டும் என்று நேரு கூறியிருக்கிறார். இது மிகவும் அவசரமான, தெளிவற்ற பேச்சாகும், இத்தகைய கொடூரமான திசையில் நேருவின் சிந்தனை ஏன் திரும்பியது என்று தெரியவில்லை. இதுதான் கடைசி வார்த்தை. இதோடு இந்த விவகாரம் முடிந்துவிடும் என்று நேரு கருதுகிறாரா?
இந்தப் போர் முரசங்களைக் கேட்டு திமுக ஏமாந்துவிடாது. போர் என்பதே தேவையற்ற, அறவே வேண்டப்படாத இடத்தில் போரைப் பற்றி பேசுகிறார் நேரு. ஆனால், வெளிநாட்டுப் படை முற்றுகையிட்டு முன்னேறும்போது, சமாதானவாதியாக காட்சி அளிக்கிறார். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற சக்திக்கு மீறிய வகையில் முயல்வதால் ஏற்படும் குழப்பம் மிக்க சிந்தனையின் அறிகுறியே இது”
அண்ணாவின் இந்த தெளிவான பேச்சு, நேருவின் பேச்சை கிழித்தெறிந்தது. நேரு அதிர்ச்சியடைந்தார்.
இந்திய எல்லைப் பகுதியில் சீனா ராணுவம் யுத்தத்தை தொடங்கியது.
இந்தியா சீனா இடையிலான எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், வேறு சில காரணங்களும் இருந்தன. 1959ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க தலாய் லாமா மறுத்தார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இது சீனாவுக்கு கடுப்பேற்றியது.
1962 அக்டோபர் 20ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து தாக்குதலை நடத்தியது. சீன படைகள் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினர். மேற்கு பகுதியில் சுசுல் பள்ளத்தாக்கிலுள்ள ரிசாங் லா கணவாயை கைப்பற்றினார்கள். மேலும் கிழக்கு பகுதியில் தாவாங் என்ற இடத்தையும் கைப்பற்றினார்கள். எனினும் சர்வதேச தலையீடுகள் காரணமாக 1962, நவம்பர் 20ல் சீனா போர்நிறுத்தம் அறிவித்தது. போர் முடிவுக்கு வந்தது. சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளில் இருந்து சீனா பழைய நிலைக்கு திரும்பியது.
இந்தப் போர் சமயத்தில்தான் திமுக மத்திய அரசுக்கு ஆதரவாக தனது நிலையை அறிவித்தது. நாட்டுக்கு ஒரு ஆபத்து எனும்போது கட்சி வேறுபாடுகளை மறந்து கைகோர்ப்போம் என்றும், பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதாகவும் அண்ணா அறிவித்தார். அதேசமயம் பிரிவினை கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
ராணுவ வீரர்களுக்கு ஏராளமான ரத்தம் தேவைப்படும் என்றும், திமுகவினர் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். யுத்தநிதி வசூலித்து முதல்வர் காமரஜரிடம் கொடுக்கச் செய்தார்.
பிரிவினை கோரும் கட்சிகளைத் தடைசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டதால்தான் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதாக விமர்சனம் எழுந்தது. அதாவது, இந்தியா மீது அன்னிய நாடு போர் தொடுப்பதை எதிர்த்து இந்திய அரசுடன் இணைந்து போராட முன்வந்த திமுகவின் நல்ல முடிவையும் சிலர் கொச்சைப்படுத்தினர்.
அதைப்பற்றியெல்லாம் அண்ணா கவலைப்படவில்லை. திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலேயே அவர் உறுதியான முடிவை எடுத்தார்.
இந்தியா மீது சீனா போர்தொடுத்த சமயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருபிரிவினர் சீனா ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர். இன்னொரு பகுதியினர் சோவியத் ஆதரவு நிலைப்பாடை எடுத்தனர்.
ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
இந்தியா மீது சீனா போர்தொடுத்த அதேசமயத்தில்தான், கியூபாவுக்கு சோவியத் யூனியன் ஏவுகணை வழங்கியது தொடர்பாக அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
சீனா ஆதரவு, சோவியத் ஆதரவு என்ற இரு குழுக்களாக பிரிந்த கம்யூனிஸ்ட்டுகள் கட்சிக்குள் தொடர் விவாதங்களில் ஈடுபட்டனர். சீன ஆதரவு நிலையை எடுத்த நூற்றுக்கணக்கான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.
சோவியத் ஆதரவு நிலை எடுத்த தலைவர்கள் காங்கிரஸ் அரசின் ஆதரவோடு கட்சியில் அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகவே 1964 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரிகள் என்றும் வலதுசாரிகள் என்றும் இரண்டாக பிளவுபட்டது.
டாங்கே தலைமையிலான வலதுசாரிகள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்களை எதிர்த்து 32 முக்கிய தலைவர்கள் வெளியேறி தனியாக மாநாடு நடத்தினர். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களுக்கு தலைமை வகித்தார்.
1964 அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இடதுசாரிகளின் மாநாட்டில் தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள கட்சியின் பெயரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று பிரகடனம் செய்தனர்.