தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ரத யாத்திரை மற்றும், அதே சமயம் புதுக்கோட்டையில் நடந்த பெரியார் சிலை தாக்குதல் பற்றி பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டி.
இன்று தமிழ்நாட்டில் மதக்கலவரம் திட்டமிட்டு தூண்டப்படுகிறது. தமிழகத்தில் ரத யாத்திரை, தமிழகர்களின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது அதை திசை திருப்ப பெரியார் சிலை தாக்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இங்கு நடக்கின்றவை எல்லாம் தனித்தனியானவையும் அல்ல, தன்னிச்சையானவையும் அல்ல. எல்லாம் வஞ்சகத்தோடு, பின்னணி திட்டத்தோடு செயல்படுத்தப்பட்ட சூழ்ச்சிகள் ஆகும்.
தமிழக்தில் ஒரு கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என பா.ஜ.க நினைப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தப் போக்கு இந்துக்கள் மற்றும் இந்துக்களை எதிர்ப்போர்கள் என மக்களை பிளவுபடுத்தி பிரிவினை செய்யவே நிகழ்த்தப்பட்ட நிகழ்வாகவே பார்க்கிறேன். இந்துக்களுக்கும் எங்களை போன்றவர்களுக்கும் எந்த பிரச்னையுமில்லை, கோடிக்கணக்கான இந்து மக்களை நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் இந்த நிகழ்வு மீண்டும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் யுத்தத்திற்குதான் வழிவகுக்கிறது.
ரத யாத்திரையை மிக நியாயமாக சட்ட ரீதியாக வேண்டாம் என்று மறுக்கக் காரணம் உள்ளது. ராமர் கோவில் கட்டுவது பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டுவது சட்ட அவமதிப்பு இல்லையா? அதை செய்யக்கூடாது என்று சொன்னால் அதை திசை திருப்பதான் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருகிறது. அப்படி செய்தால்தான், கலவரம் வெடிக்கும் தன்னிச்சையாக இளைஞர் போராட்டங்கள் வெடிக்கும் இதன் மூலம் அவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து விடலாம் என இவ்வளவு சூழ்ச்சிகளை பொதிந்துள்ளது பெரியார் சிலை உடைப்பு.
பெரியார் சிலை உடைப்பதை பார்க்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பெரியார் இறந்து 45 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரின் சிலை உருவத்தை பார்த்து அஞ்சும் கோழைகளை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவ்வளவு வடிகட்டிய கோழைகளை எதிர்த்துதான் நாம் அரசியல் செய்கிறோம் என்று நினைக்கையில் வெட்கமும் வேதனையும் வருகிறது. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் எப்படியாவது விஷ விதையை விதைக்க நினைக்கிறது பாரதிய ஜனதா, கையாளாகாத ஆளுங்கட்சி இதற்கு துணைபோகிறது. எல்லாரும் போராட்ட களங்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள் இதுதான் உண்மை. எனவே ஆளுங்கட்சி, பாரதிய ஜனதா தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு சேர நிற்கவேண்டிய தருணம் இது எனக்கூறியுள்ளார்.