இரோம் ஷர்மிளா பிறந்த நாள்
அரசியல்வாதிகளின் உண்ணாவிரத போராட்டம் என்பது கிட்டத்தட்ட கேலிக்கூத்தாகவே ஆகிவிட்டது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நடந்த உண்ணாவிரத போராட்டங்கள் பல. ஒரு பக்கம் போராட்டங்கள் இப்படி இருக்கையில், ஜல்லிக்கட்டுப் போராட்டம், மஹாராஷ்டிராவில் நடந்த விவசாயிகள் போராட்டம் போன்றவை மக்கள் போராட்டத்திற்கான பலத்தையும், பெயரையும் அழியாமல் தக்கவைத்திருக்கின்றன.
போராட்டங்களின் நிலை இப்படி எல்லாம் இருக்கையில், 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி தங்கள் மாநிலத்தில் நடக்கும் அக்கிரமங்களுக்காக குரல் கொடுக்கும் வகையில், மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்த்து ஒரு பெண்மணி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். உண்மையில் ஆகார உணவுகளும் தண்ணீரும் எடுத்துக்கொள்ள சம்மதிக்கவில்லை, இருந்தாலும் அரசின் சார்பில் வலுக்கட்டாயமாக அவரின் நாசியில் ட்யூப் பொருத்தி தினசரி 1600 கலோரிகள் நீராகாரமாய் கொடுத்தனர். அவரும் போராட்டத்தை கைவிட்டுவிடுவார் என்று முதலில் தப்புக்கணக்கு போட்டவர்களை தவறாக்கும் விதமாக அவரது நோக்கமும் போராட்டமும் உறுதியாக இருந்தது. வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில்தான் இந்தப் போராட்டம் நடந்தேறியது. இந்தப் போராட்டம் என்பது அவர் மாநிலத்திற்காக மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரேதசம், மணிப்பூர், அஸாம், நாகாலாந்து, மிசோராம், மேகாலயா, திரிபுரா இவற்றிற்கும் சேர்த்துதான் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 'ஆர்ம்ட் போர்ஸ் ஸ்பெஷல் பவர்' (ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்) என்னும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1953ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டம் போகப் போக 1958 ஆம் ஆண்டு ஏழு தங்கைகள் என்று சொல்லப்படும் அந்த மாநிலங்கள் தனித்துவமான பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டு இந்த சட்டத்தை கொண்டுவந்தனர். இது அங்கு ராணுவத்தின் அராஜகத்திற்கும் வழிவகுத்தது. மக்கள் பல விதங்களிலும் துன்புறுத்தப்பட்டனர். விளையாட்டுப் போக்கில் மக்களை சுட்டுத் தள்ளினர். மணிப்பூரில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பத்து பேரை ஏன் எதற்கு என்றெல்லாம் விசாரிக்காமல் சுட்டுத்தள்ளினர். இது மலோம் படுகொலை என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டம் இந்தியாவில் இருக்கும் இந்த ஏழு மாநிலங்களில் மட்டும் இல்லை, பஞ்சாப் மற்றும் சண்டிகரில் 1983 ஆம் ஆண்டு முதல் பதினான்கு வருடங்கள் இருந்தது. 1999ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டு இன்றுவரை நீடித்துக்கொண்டே வருகிறது.
மலோம் படுகொலைக்குப் பின்னர்தான் அந்தப் பெண்மணி போராட்டத்தில் இறங்கினார். அப்போது அவருக்கு இருபத்தியெட்டு வயதே ஆகியிருந்தது. காதல், கல்யாணம் வேலை, படிப்பு போன்று எதிலும் திசை திருப்பப்படாமல், மக்களின் மனித உரிமைக்காக போராடத் தொடங்கினார். போராட்டம் நீண்டுகொண்டே இருந்தது. திடீரென போலீஸாரால் கைது செய்யயப்படுவார், விடுதலையாவார். இதுபோன்று பதினாறு வருடம் வரை அவரது போராட்டம் நீடித்தது. இருந்தும் இந்த அரசாங்கம் மசியவில்லை, வேறு என்ன வழி என்று யோசிக்க, மக்களுக்காகப் போராடினால் மட்டும் போதாது. அந்த சட்டத்தை நிராகரிக்கக் கூடிய பதவிக்கு வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி அவரது போராட்டத்தை தேன் சாப்பிட்டு முடித்துக்கொண்டார். 'அவரது இத்தனை வருட போராட்டம் வீண் போனது', 'அவரின் நோக்கம் நிறைவேறவில்லை. இருந்தாலும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அரசியலுக்கு வருகிறார், அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது', என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார். இந்தப் போராட்டத்தை அவர் கைவிட இன்னுமொரு காரணம் அவரது காதலன் என்றனர்.
அரசியலுக்கு வருவதற்காக புது கட்சியைத் தொடங்கினார். மூன்று முறை முதலமைச்சரான இபோபி சிங்கை எதிர்த்து களத்தில் இறங்கினார். தேர்தலுக்கான வாக்குறுதியாக, "மனித உரிமைகளும் மனிதாபிமானமும் மரணிக்காமல் இருக்க போராடுவேன்", என்றார். ஆனால், அவரது பதினாறு வருட போராட்டத்திற்கு 90 வாக்குகள் மட்டுமே அளிக்க முடியும் என்று மக்கள் முடிவு செய்தனர். அடுத்த வருடமே நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று முடிவு செய்தார். போராட்டங்களெல்லாம் போதும், என்னை காதலித்த என் காதலன் போதும் என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டார் போல. தற்போது தன் கணவருடன் கேரளாவில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
தீவிரவாதம் என்னும் ஒற்றை வாதத்தை வைத்துக்கொண்டு பொது மக்களையும் சுட்டுத் தள்ளிய, துன்புறுத்திய அதிகாரத்தை எதிர்த்து, இதன் பேரில் ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தையே ஒடுக்கியதை எதிர்த்து உணவும் நீரும் இன்றி உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி தோல்வியை கண்டார். இவரது போராட்டத்திலும் தேர்தல் அரசியலிலும் இவர் தோற்றிருக்கலாம். ஆனால், எந்தப் பின்புலமும், அரசியல் இயக்கங்களும், பெருங்கூட்டமும் இல்லாமல் அநீதியை எதிர்த்து ஒரு தனி உயிரும் குரல் கொடுக்க முடியும் என்று அத்தகைய போராட்ட மனம் கொண்ட ஒவ்வொருவருக்கும் உத்வேகமளித்தவர் என்ற முறையில் வெற்றிபெற்றவர் இந்த இரும்பு மனிதி இரோம் சர்மிளா.