வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாயும், கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை 75 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இத்துடன் இலவச இணைப்பாக, தமிழகத்தில் உள்ள 21 சுங்கச் சாவடிகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திணறிக்கொண்டிக்கும் மக்களுக்கு இந்த விலையேற்றம் மூச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. அதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறைகூட மாற்றி அமைக்கப்படுகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
2021-ம் ஆண்டின் ஜனவரி மாதத் தொடக்கத்தில், 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த சிலிண்டரின் விலை, இப்போது ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 610 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் விலை, பன்னிரண்டே மாதங்களில் 290 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 900 ரூபாய் 50 காசாக வந்திருக்கிறது. அதாவது, இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் 100 ரூபாயும், மார்ச் மாதத்தில் 25 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டது. அடுத்த மூன்று மாதங்கள், கேஸ் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை. இடையில், ஏப்ரல் மாதத்தில் ஒரே ஒருமுறை மட்டும், 10 ரூபாய் குறைக்கப்பட்டது. பிறகு, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் என்ன செய்வது எனப் புரியாமல் புலம்பி வருகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு சிலிண்டரின் விலை 1,000 ரூபாயாக உயர்ந்திருந்தாலும், அப்போது பெரும்பான்மையான தொகை மானியமாக வழங்கப்பட்டு ரூ.500, ரூ.450 என்ற அளவிலேயே மக்களிடமிருந்து சிலிண்டருக்கான தொகையாக பெறப்பட்டது. ஆனால், தற்போதோ மானியமாக வெறும் 25 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிலிண்டரின் விலை ஏறினாலும், அந்தத் தொகை மானியமாக மீண்டும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மானியமும் குறைத்த அளவே தரப்படுகிறது என்பதே வேதனைக்குரிய விஷயம்.
கடந்த 2014-ம் ஆண்டு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக மானியங்களை வழங்காமல், மக்களுக்கே மானியங்கள் வழங்கப்பட்டது. இந்த நேரடி மானியத் திட்டத்தை, அப்போதைய முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. இப்படி நேரடியாக மக்களுக்கே மானியம் வழங்குவதன் மூலம், மானியங்களை காங்கிரஸ் ஒழிக்கப்போவதாக, பாஜக குற்றஞ்சாட்டியது. ஆனால், இதே பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், மானியம் கொடுக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அத்துடன், அதைப் பொதுமக்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்திவந்தது. தொடக்கத்தில், சுமார் 400 ரூபாய் வரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கேஸ் மானியம், இப்போது வெறும் 25 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மத்திய அரசே தீர்மானித்து வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு, கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஏற்ப பெட்ரோல், டீசல், கேஸ் விற்பனை விலையை, '15 நாட்களுக்கு ஒருமுறை' பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதனைக் கடுமையாக எதிர்த்தது பாஜக. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை, 'தினசரி' மாற்றம் செய்துகொள்ளும் அதிகாரத்தைப் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கியது. பிறகு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறும்போதெல்லாம், மத்திய அரசு பெட்ரொலிய நிறுவனங்களையே கைகாட்டி வருகிறது.
இந்நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலையும் ரூபாய் 75 உயர்ந்து, இப்போது 1,831 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகி வருகின்றன. இதனால், செய்வதறியாது உணவக முதலாளிகள் தவித்து வருகின்றனர். இதைப்போலவே, சுங்கச் சாவடிகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகிறன. இதில், 26 சுங்கச் சாவடிகளின் கட்டணம், கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், மிச்சம் உள்ள 21 சுங்கச் சாவடிகளின் கட்டணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சரக்கு வாகனம், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் எனப் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். முன்பெல்லாம் கேஸ் விலை உயரும்போது, வழங்கப்படும் மானியத்தின் தொகையும் கூடுதலாக இருக்கும். இதனால், சாமானிய மக்களுக்கு விலைவாசி உயர்வு பெரும் சிக்கலாக இருக்காது. ஆனால், தற்போது விலை மட்டுமே உயர்ந்துகொண்டிருப்பது அடித்தட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.