மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் நடிகர் சத்யராஜ், பொன்வண்ணன், சமூக செயற்பாட்டாளர் அருள்மொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “நான் 1986 ஆம் ஆண்டு கலைஞர் வசனத்தில் உருவான பாலைவன ரோஜாக்கள் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தவர் தந்தை பெரியார் தான். தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டே நம்மை விட்டு மறைந்துவிட்டார். அப்படி இருக்கையில் எப்படி அந்த வாய்ப்பை தந்திருக்கக் கூடும் என்று நீங்கள் எண்ணலாம். வாய்ப்பு அளித்தது என்றால் தந்தை பெரியாரின் உருவம் அல்ல, அவருடைய கொள்கைகள் தான் எனக்கு அந்த வாய்ப்பை அளித்தன.
1986 ஆம் ஆண்டில் நானும் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் அதிக படங்கள் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் தான் இருக்கும். அச்சமயம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஒரு நாளில் இயக்குநர் மணிவண்ணன் என்னிடம் வந்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் கைகோர்க்கலாம் என்று சொன்னார். நானும், அதற்கென்ன.. எப்போது படப்பிடிப்பு என்று மட்டும் சொல்லுங்கள், வருகிறேன் என்றேன். ஆனால், அந்த படத்தில் கலைஞர் வசனம் எழுதும் சிறப்பு இருக்கிறது என்றார்.
அவருடைய வசனத்தை பேசித்தானே சினிமாவிற்கு வந்தோம் என்று எண்ணி உடனே சரி என்று சொன்னேன். ஆனால், அந்த நேரத்தில் நான் பெரியார் கொள்கைக்காரன் என்றோ எம்.ஜி.ஆர் ரசிகன் என்றோ யாருக்கும் தெரியாது. நான் கலைஞர் வசனத்தில் நடிப்பதை என்னை சுற்றி இருந்தவர்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நான் நடிப்பதை தடுக்க பல பேர் முயற்சி செய்தார்கள். நான் இந்த படத்தில் நடித்தால் என்னை திமுககாரன் என்று பேர் குத்தி விடுவார்கள் என்று சொன்னார்கள்.
நானும், எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களுடைய முதல் படம் கலைஞர் வசனத்தில் உருவான படம் தான். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்றேன். என்னிடம் இருந்த உதவியாளர் நான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகக் கேட்டார். அதற்கும் கலைஞரின் பூம்புகார் நிறுவனம் சரி என்றது. அதற்கு ஒரு படி மேல் என்னிடம் இருந்தவர், ‘கலைஞர் வசனம் எழுதி சில படம் சரியாக ஓடவில்லை. கலைஞர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அதனால் அவருக்கு நேரம் சரியில்லை. இந்த நேரத்தில் நீங்கள் நடிக்கனுமா?’ என்று கேட்டார்.
அப்போதுதான் நான் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்கனும் என்றேன். நான் ஒரு பெரியாரியவாதி. அதனால் இது போன்ற நம்பிக்கை இல்லை என்று அப்போதுதான் முதல் முதலில் சொன்னேன். எதற்கும் பயப்படாதவன் இந்த நேர காலத்திற்கு பயப்படுவான். அதனால்தான் கலைஞர் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தவர் தந்தை பெரியார் தான்.
அப்படி அந்த பாலைவன ரோஜாக்கள் படத்தின் படப்பிடிப்பு முரசொலி அலுவலகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. 4 ஆம் நாள் படப்பிடிப்பின்போது நானும் மணிவண்ணனும் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது கலைஞர் வருகிறார் என்ற செய்தி கேட்டவுடன் உடனே சிகரெட்டை கீழே போட்டுவிட்டு கலைஞரிடம் போய் பேசினேன். அப்போது ஏற்பட்ட பழக்கம் அடுத்து அவர் எழுதிய மண்ணின் மைந்தன் படத்திலும் நான் நடித்தேன். பெரியார் படத்தில் நான் நடித்த போது கூட கலைஞர் என்னிடம் மிகவும் நெருக்கமாகப் பழகினார்.
மேலும், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை முதல் முதலில் அமலாக்கியவர் கலைஞர் தான். ஆனால், அந்த நேரத்தில் நமக்கு நேர்மாறாக இருந்தவர்கள் பலரும் இதை எதிர்த்தார்கள். இதற்காகவே பெண்கள் அனைவரும் கலைஞரின் ஆதரவாளர்களாகத்தான் இருக்க வேண்டும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை கொடுத்துவிட்டால் அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு முழுமையான விடுதலையை அடைவார்கள். இன்றும் பல முதலமைச்சர்கள் கொடி ஏற்றுவதற்கு நமது கலைஞர்தான் காரணம். மத்திய அரசில் ஆட்சி செய்த மோடி கூட குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது கொடி ஏற்றுகிறார் என்றால் அதற்கும் கலைஞர் தான் காரணம். இந்த துணிச்சலான அரசாங்கத்தை பத்து பக்கம் வசனத்தோடு காட்டத் தெரியும். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய புன்னகையிலும் காட்டத் தெரியும்.
திராவிடம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது பெரும் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்திற்குள் உள்ளே போனவர்கள் வெளியே வர முடியாது. ஒரு தனி மனிதனின் தவறுகளைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் ஒரு சித்தாந்தத்தில் குறையே சொல்ல முடியாது என்றால் அது தான் திராவிடச் சித்தாந்தம். ஏனென்றால் அனைவரின் சம உரிமைக்காகவும், கல்வி, வேலைவாய்ப்புக்காகவும் உரிமை கொடுக்கும் இயக்கம் இந்த திராவிட மாடல் இயக்கம் தான். ஒரு வாரிசு என்பதற்காக அவரை குறை சொல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் தன்னுடைய 15 வயதில் மிதிவண்டியில் கொடியைக் கட்டிக்கொண்டு சென்று மிசாவில் அதிக அடக்குமுறைகளுக்கு ஆளானவர். இந்த திராவிட அரசியலில் துணிச்சல் மிக்க தலைவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
கலைஞர் வசனத்தில் நான் நடித்த இரண்டு படங்களுமே கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்த சமயம் தான். அவர் முதலமைச்சராக இருந்த போது என்னை அவர் வசனத்தில் நடிக்கக் கேட்டுக்கொண்டார். ஆனால், நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது நடிக்கீறிங்க. முதலமைச்சராக இருந்தபோது நடிக்க மாட்டிக்கிறீங்க, ஏன்? என்று கலைஞர் கேட்டார். அதற்கு நான் அந்த தயாரிப்பாளர் சம்பளத்தை கொடுக்க மாட்டார் என்று சொல்லிவிட்டேன். முதலமைச்சராக இருந்தால் இதையெல்லாம் எப்படி வாங்கிக் கொடுக்க முடியும் என்று கலைஞர் சிரித்த முகத்தோடு சொன்னார். இப்படி அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அந்த ஒவ்வொரு சிரிப்புக்குள்ளும் அவருடைய சித்தாந்தம் இருக்கும்” எனக் கூறினார்.