Skip to main content

நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு இந்தக் கருவியை வாங்குகிறீர்கள்... கரோனா காலத்தில் கூட அதிமுக மெகா ஊழல்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020


 

kit



ஏப்ரல் 14-ந் தேதியிட்ட நக்கீரன் இதழில் ரேப்பிட் கிட் வாங்கியதில் ஊழல் என செய்தி வெளியிட்டிருந்தது. ஏப்ரல் 28-ந் தேதி அந்த ஊழல் இந்தியா முழுக்க ஊடகங்களில் செய்தியானது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பினர். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி நஜ்னிவஜிரி அளித்த தீர்ப்பில், ரேப்பிட் டெஸ்டிங் கிட்டை ஒரு கிட் 600 ரூபாய் என வாங்கியது தவறு எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த ரேப்பிட் கிட்டை சீனாவைச் சேர்ந்த இரண்டு கம்பெனிகள் மேட்ரிக்ஸ் லேப் என்கிற இந்திய கம்பெனிக்கு சப்ளை செய்திருந்தது. மேட்ரிக்ஸ் லேப், ரியல் மெட்ட போலிக், ஆர்ச் பார்மாசூட்டிக்கல்ஸ், ஷான் பயோடெக் என 6 கம்பெனிகளுக்கு கொடுத்து, இந்தக் கம்பெனிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கும் தமிழக அரசுக்கும் சப்ளை செய்தன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்  ஒரு ரேப்பிட் கிட் கருவி வாங்க அதிகபட்ச விலை 600 ரூபாய் என நிர்ணயித்திருந்தது. மொத்தம் 5 லட்சம் கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வாங்க மேட்ரிக்ஸ் லேப்பிடம் விநியோகஸ்தர்கள் மூலமாக ஆர்டர் கொடுத்தது. அதில் இரண்டரை லட்சம் கருவிகள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது.
 

 

kit


தமிழக அரசு ஆர்டர் கொடுத்திருந்த 50 ஆயிரம் கருவிகளில் 24,000 கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது. மேலும் ஆர்டர் கொடுத்தபடி இரண்டரை லட்சம் கருவிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகதிற்கும் 26,000 கருவிகள் தமிழக அரசுக்கும் விநியோகஸ்தர்கள் மூலமாகத் தரவேண்டும் என்றால் மொத்த பில் தொகையையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என மேட்ரிக்ஸ் லேப் கண்டிஷன் விதித்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விநியோகஸ்தர்கள் வழக்குத் தொடர்ந்தனர். டெல்லி உயர்நீதிமன்றம், நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு சீன கம்பெனியிடமிருந்து விலைக்கு வாங்குகிறீர்கள்?எனக் கேள்வி எழுப்பியது. “நாங்கள் ஒரு கருவியை 3 யு.எஸ். டாலர் என இந்திய ரூபாய் மதிப்பில் 225 ரூபாய்க்கு வாங்குகிறோம். அதைக் கொண்டுவருவதற்கான விமானச் செலவு 20 ரூபாய்…ஆக மொத்தம் ஒரு கருவியின் விலை 245 ரூபாய்’’என மேட்ரிக்ஸ் நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்தது.

“இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆர்டர் கொடுத்த 5 லட்சம், தமிழக அரசு ஆர்டர் செய்திருந்த 50 ஆயிரம் கருவிகளுக்காக சுமார் 150 கோடி ரூபாய் சீன நிறுவனத்திடம் கட்டிவிட்டுத்தான் நாங்கள் இறக்குமதி செய்திருக்கிறோம், ஆகவே ஒட்டு மொத்த கருவிகளையும் நாங்கள் விநியோகஸ்தர்களுக்குத் தரவேண்டும் என்றால் மொத்தப் பணத்தையும் கொடுத்தால்தான் தரமுடியும்'' என மேட்ரிக்ஸ் லேப் நிறுவனம் தெரிவித்தது.
 

admk

 


உடனே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தமிழக அரசு பக்கம் திரும்பிய கோர்ட், “நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு இந்தக் கருவியை வாங்குகிறீர்கள்’ எனக் கேட்டது. அவர்கள், "600 ரூபாய்க்கு வாங்குகிறோம்' எனச் சொன்னதும், நீதிபதி கோபமடைந்தார். "வெறும் 245 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கருவியை ஏன் 600 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள்'’ எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், "நாங்கள் இந்தக் கருவியை இறக்குமதி செய்வதற்குப் பல நிபந்தனைகள் விதித்திருந்தோம். அதில் முக்கியமானது, இந்தக் கருவி பயன்படுத்துவதற்கு தகுதியானதுதானா என்பதைக் கண்டறிய வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதற்குத் தகுதியானதாக இருந்தால் ஒரு கருவியின் விலை 600 ரூபாய்க்கு மேல் போகக்கூடாது என்பது நாங்கள் விதித்த நிபந்தனை என்றது. அதனால்தான் இந்தக் கருவியை விநியோகம் செய்தவர்கள் 600 ரூபாய் விலை என்று சொன்னார்கள். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம்'' என்றார்கள்.

 

 

admk


தமிழக அரசு தரப்பில் "நாங்கள் ஷான் பயோடெக் என்கிற நிறுவனத்திடமிருந்துதான் இந்தக் கருவிகளை வாங்கினோம். அவர்கள் 600 ரூபாய் என ஐ.சி.எம்.ஆர். இந்தக் கருவியை வாங்கிய அதே விலையை சொன்னார்கள். நாங்கள் வாங்கினோம். மேலும் 5 லட்சம் கருவிகள் வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்திருக்கிறோம். இந்நிலையில் ஐ.சி.எம்.ஆர். நிறுவனம் அந்தக் கருவி சரியாக வேலை செய்யாததால், சோதனை செய்வதை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டது. அதனால் நாங்கள் சோதனை செய்வதை நிறுத்திவிட்டோம்'' என்று விளக்கமளித்தது.

இதற்கு, கருவிகளை உற்பத்தி செய்த சீன கம்பெனிகள் முழு விளக்கத்தை கோர்ட்டில் சமர்ப்பித்தது. “தகுதி சோதனைகள் நடத்தப்பட்ட பிறகுதான் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. அதில் ஏதாவது கோளாறுகள் என்றால் எங்கள் கம்பெனியின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து சரிசெய்து கொடுப்பார்கள் என்றது.


இந்த வாதங்களையெல்லாம் கேட்ட நீதிபதி, "245 ரூபாய் அடக்கமுள்ள கருவியை 600 ரூபாய்க்கு விற்பது தவறு. கரோனா போன்ற தேசிய பேரிடர் நிகழும் காலத்தில் உலக நாடுகளே பொருளாதாரத்தில் நிலைகுலைந்து நிற்கிறது. இந்தச் சூழலில் 3 மடங்கு அதிக விலைக்கு விற்பது தவறு எனச் சொன்னதுடன், அதிகபட்சம் 225 ரூபாய்க்கு பெறக்கூடிய இந்தக் கருவியை 400 ரூபாய்க்கு விற்கலாம்'' எனத் தீர்ப்பளித்தது.

இது அந்த நிறுவனங்களிடமிருந்து 600 ரூபாய்க்கு கருவிகளை வாங்கிய ஐ.சி.எம்.ஆர்.க்கும் தமிழக அரசுக்கும் பேரிடியாக அமைந்தது. அந்தத் தீர்ப்பு கரோனா காலகட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் நடைபெறும் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தமிழக அரசு ரேப்பிட் கிட் கருவியை வாங்குவதற்கு மட்டும் சுமார் 200 கோடியை ஒதுக்கியிருந்தது. இது தவிர, வெண்டிலேட்டர்கள், கரோனா பாதுகாப்பு உடை, மருந்துகள் இவற்றை 500 கோடி ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டிருந்தது.

இதில் 250 கோடி ரூபாய்க்கு ஏற்கனவே பல வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு இந்த கரோனா காலத்தில் மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க திட்டமிட்டிருந்தது.

டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக அரசு வாங்க திட்டமிட்டிருந்த பொருட்களில் நடைபெறும் கமிஷன் கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
 

http://onelink.to/nknapp



தமிழக அரசு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஷான் பயோடெக் என்கிற நிறுவனத்தை நடத்தும் குமார் என்பவர் மூலமாகத்தான் இந்த ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியுள்ளது. இந்த குமார், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் கன்சல்ட்டெண்ட்டாக இருக்கும் ஆனந்த் என்பவருக்கு நெருக்கமானவர். இந்த ஆனந்த், பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் அவரை கன்சல்ட்டெண்ட்டாக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமித்திருக்கிறார். அவர்தான் தமிழக அரசுக்குத் தேவையான மருத்துவக் கருவிகளை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு டிஸ்ட்ரிபியூட்டர்களிடமிருந்து வாங்கித் தருவார்.

தமிழக அரசுக்கு ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் தேவை எனக் கோரிக்கை எழுந்தபோது பல கம்பெனிகள் அந்தக் கருவியை சப்ளை செய்ய முன்வந்தன. அதில் தென்கொரிய கம்பெனிகளும் இருந்தது. அந்த தென்கொரிய கம்பெனிகளில் ஒன்றுதான் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ரேப்பிட் டெஸ்ட் கருவியை 343 ரூபாய்க்கு சப்ளை செய்தது. 343 ரூபாய்க்கு சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ரேப்பிட் டெஸ்ட் கருவியை சப்ளை செய்த கொரிய நிறுவனத்தை மீறி ஷான் பயோடெக் மூலம் சீனக் கம்பெனிகளின் கருவியை 600 ரூபாய்க்கு தமிழக அரசு வாங்கியதற்கு காரணம் இந்த ஆனந்த்தான்.

“கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஆனந்த்தான் வாங்கிக் கொடுப்பார். இவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என அனைவருடனும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் அதிக விலை வைத்து 30 முதல் 40 சதவிகிதம் வரை கமிஷன் அடித்து மேலிடத்திற்குத் தேவையான பங்கை கொடுக்கும் வேலையை கனகச்சிதமாக ஆனந்த் செய்து முடித்துவிடுவார். அதனால் ஆனந்தைச் சுற்றி அமைச்சர்களின் உறவினர்களும் கம்பெனி புரோக்கர்களும் எப்பொழுதும் இருப்பார்கள். அப்படித்தான் இந்த ரேப்பிட் கிட் விவகாரத்திலும் ஆனந்த் ஈடுபட்டார். ஆனந்தை கேள்விகேட்க தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் உமாநாத் ஐ.ஏ.எஸ். கூட பயப்படுவார்'' என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.

"கரோனா காலத்தில் 1,000 கோடிக்கு 40 சதவிகிதம் என 400 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.