கரோனா தொற்று அதி வேகமாகப் பரவியதற்குக் கோயம்பேடு மொத்த வியாபார சந்தையும் ஒரு முக்கியக் காரணம் என்பதால், காய்கறிகள் சந்தையைத் திருமழிசைக்கும், பூ மற்றும் பழம் மார்க்கெட்டை மாதவரத்துக்கும் என இரண்டு பகுதிகளில் தற்காலிகமாக மாற்ற முடிவு செய்திருக்கிறது எடப்பாடி அரசு.
இதற்காக நடந்து வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் திருமழிசைக்கு இன்று விசிட் அடிக்கின்றனர். இந்த நிலையில், ’’கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக மூன்றாகப் பிரிக்க வேண்டும்‘’ என்கிற கோரிக்கை சில்லரை வியாபாரிகளிடமும் சமூக ஆர்வலர்களிடமும் எதிரொலிக்கின்றன. இது குறித்து, முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பவும் தயாராகி வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கண்ணன், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் வந்து போகிறார்கள். மொத்த வியாபாரிகளின் கூடாரமான கோயம்பேடு சந்தை, சில சங்கங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட 12 நபர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
சென்னையில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் அதனைத் தடுப்பதற்காக கோயம்பேடு சந்தையை மாற்றியமைக்க மொத்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, கோயம்பேடு சந்தையை 3 இடங்களில் பிரித்து வைக்கலாம்; அதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள் எனச் சொன்னது. ஆனால், மொத்த வியாபாரிகள் ஒத்துழைக்க மறுத்தனர்.
அதே சமயம், தொற்று வேகமாகப் பரவி வந்ததால், அதனைத் தடுக்கும் பொருட்டு சென்னையில் 4 நாள் முழு ஊரடங்கை அரசு திடீரென அறிவித்தது. ஆனால், கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், சமூக விலகலை உடைத்தது. இதனால், சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு கரோனா பரவியதற்கு மிக முக்கியக் காரணியாக மாறியது கோயம்பேடு சந்தை.
இதற்கிடையே, காய்கறிகள் மீது செயற்கையான டிமாண்டை உருவாக்கினார்கள். அதாவது, ஏப்ரல் 26 முதல் 29 வரை சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என 24-ஆம் தேதி அறிவித்தது அரசு. கோயம்பேடு மார்க்கெட்டை தூக்கப் போகிறார்கள் என உணர்ந்து அதிர்ப்தியடைந்த மொத்த வியாபாரிகள், காய்கறிகளுக்கும் மளிகைப் பொருட்களுக்கும் செயற்கையான டிமாண்டை அதிகரிப்பதற்காக, 24-ஆம் தேதி விற்கப்பட்ட காய்கறிகளின் விலையைப் பல மடங்குக்கு உயர்த்தி விட்டனர். 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, 25-ஆம் தேதி 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் இப்படித்தான் உயர்ந்தது. இதனால் மக்கள் சொல்ல முடியாதத் துயரத்துக்கு ஆளானார்கள்.
மக்களோடு தினமும் பயணிக்கும் சில்லரை வியாபாரிகள் கூட இந்தத் திடீர் விலை உயர்வில் மிகவும் நொந்து போனார்கள். இதனால் மொத்த வியாபாரிகள் மீது சில்லரை வியாபாரிகள் அதிருப்தியடைந்தனர். ஆனால், அவர்களை எதிர்க்கவும் முடியாமல், மக்களின் கோபத்தைச் சமாளிக்கவும் முடியாமல் திணறினார்கள்.
இந்த நிலையில்தான், கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றுவது என்கிற திடமான முடிவை மொத்த வியாபாரிகளிடம் அரசு அதிகாரிகள் மீண்டும் விவரித்தனர். அதற்கு முழு மனதுடன் ஒத்துழைக்காமல் அரைகுறை மனதுடனே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் மொத்த வியாபாரிகள். நாளை முதல் திருமழிசையில் காய்கறிகள் மார்க்கெட் இயங்கும் எனத் தெரிவிகிறது.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள 2 கோடி மக்களுக்குக் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான, குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை. இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் மொத்த வியாபாரிகள் மீது அத்யாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிராக 'எஸ்மா, டெஸ்மா' சட்டத்தை எப்படிப் பிரயோகிக்கப்படுகிறதோ அப்படி மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க மொத்த வியாபாரிகள் தடையாக இருந்தால் அவர்கள் மீது அத்யாவசியச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். 2 கோடி மக்களின் நலன்களுக்காக மொத்த வியாபார சந்தையை ஆட்டிப்படைக்கும் 12 நபர்கள் மீது நடவடிக்கைப் பாய்வது தவறே கிடையாது.
சமூக ஆர்வலர் கண்ணன்
அதே போல, மொத்த வியாபார சந்தையை ஒரே இடத்தில் இருப்பதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. அதனால், கோயம்பேடு மொத்த வியாபார சந்தையை மூன்றாகப் பிரிக்க வேண்டும். கோயம்பேடு தவிர, வடசென்னை பகுதியில் ஒன்றும், வண்டலூர் பகுதியில் ஒன்றும் என மூன்றாகப் பிரிக்கும் போது நிறைய நன்மைகள் உண்டு. மிக முக்கியமாக, கோயம்பேடை மையப்படுத்தி நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகளவில் குறையும். இதுகுறித்து, அரசுக்கு கோரிக்கை அனுப்பவிருக்கிறோம்‘’ என்கிறார் மிக உறுதியாக!