
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 527 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் டாஸ்டாக் திறக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசுகையில், மத்திய அரசு தொடர்ந்து தவறான வழிகாட்டுதல் செய்வதன் விளைவுதான் இது. திடீரென இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்கிறது. பின்னர் சில தளர்வுகள் எனக் கூறி மதுக்கடைகளைத் திறக்கலாம் எனச் சொல்கிறது. மத்திய அரசு அறிவித்ததைப் பயன்படுத்தி அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறக்கிறார்கள்.
தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் வலியுறுத்தின. அண்டை மாநிலங்களில் மதுக்கடையைத் திறந்திருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்தில் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
இப்போது எந்தவிதமாக வேலைவாய்ப்பும் கிடையாது. வேலையே இல்லை என்றபோது எப்படி ஊதியம் கிடைக்கும். அரசும் பெரிய அளவில் எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மே 7ஆம் தேதி மதுக்கடையைத் திறந்தால், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு குடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வரும். கையில் காசு இல்லாதப்ப வீட்டில் இருக்கிற பண்டம், பாத்திரங்களை அடகு வைப்பாங்க, மனைவியின் தாலியைக் கூட அடகு வைத்து குடிக்க முயற்சிப்பார்கள். இதனால் குடும்ங்களில் சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும்.
மதுக்கடையில் ஐந்து பேருக்கு மேல் நிற்கக் கூடாது என்கிறார்கள். இதனை யார் கேட்பார்கள். அண்டை மாநிலங்களில் மதுக்கடை திறந்ததைப் பார்த்தோம். திருவிழாக் கூட்டம்போல் நிற்கிறார்கள். மதுபானம் வாங்க வருபவர்கள் எதைப் பின்பற்றுவார்கள், எதைப் பின்பற்ற மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளில் பெரிய அளவில் கூட்டங்கள் கூடும். குடும்பங்களில் உள்ள பொருட்களை அடகு வைக்கக் கூடிய நிகழ்வுகள், பல்வேறு சமூக விரோதச் செயல்கள் கூட நடக்க வாய்ப்பு உள்ளது. நோய்த் தொற்று நிச்சயமாக இதனால் அதிகரிக்கும். ஆகையால் 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
நாளுக்கு நாள் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதற்கு என்ன காரணம்?
இந்த நோய்ப் பரவுவதற்கு அரசுதான் காரணம். எதையும் திட்டமிட்டு, முன் யோசனை செய்து அரசாங்கம் செய்வதில்லை. திடீரென ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது. திடீரென தளர்த்தப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர், திடீரென இருசக்கர வாகனங்களுக்கு பாஸ் வாங்க வேண்டும் என்றவுடன், பெரிய கூட்டம் அங்கு கூடியது. பின்னர் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல், திரும்ப தளர்த்தப்படுவதாக அறிவிக்கிறார்கள்.

அதேபோல திடீரென நான்கு நாள் ஊரடங்கு கடுமையாக்கப்படும், இன்று மாலைக்குள் பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் கூட்டம் கடைகளில் அதிகமானது. மே 4ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் கூட்டம் காணப்பட்டது. நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறார்களா? நோய்த் தொற்று தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால் இப்படியே அரசாங்கத்தை ஒட்டிவிடலாம் என்று நினைக்கிறார்களா? எனப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மாறி மாறி அரசு முடிவெடுப்பதால்தான் நோய்த் தொற்று அதிகமாகி வருகிறது என்றார்.