தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதுகுறித்த சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஊடகங்களில் பணியாற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நிறைவுரையாற்றிய தமிழிசை, தமிழக அரசியல் தொடர்பாகவும் தான் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் பேசினார்.
இந்தப் பேச்சின் உச்சமாக அவர் தமிழகத்தில் நான் கால் வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். நான் அவர்களுக்குக் கூறுகிறேன், தமிழக அரசியலில் நான் காலையும் வைப்பேன், கையையும் வைப்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்ற கோணத்தில் பேசினார். இதுதொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்த நிலையில் திராவிட இயக்கச் சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " அவரால் தெலுங்கானாவிலேயே காலை நுழைக்க முடியவில்லை. இங்கே வந்து நுழைக்கப் போகிறார்களா? கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டத்தைப் பிடிக்கப் போகிறார்களா என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இவர்கள் சொல்லுவது அதைப்போலத்தான் இருக்கிறது.
தெலுங்கானாவில் இவர்களால் எதுவும் செய்ய முடியாமல்தான் மாநிலம் மாநிலமாக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தில் கால் நுழைப்பார்களாம். இங்கே வாலை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கேதான் ஒருத்தர் காட்டிக்கொண்டு இருக்கிறாரே? சனாதனம் தான் இந்த இந்தியாவை தீர்மானித்தது என்று உளறிக்கொண்டு இருக்கிறாரே, இவர் மட்டும் போதவில்லையா, நீங்களும் வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? தாண்டி குதிக்கிறார் தமிழிசை, தப்பாட்டம் ஆடுகிறார் தமிழிசை, வரம்பு மீறுகிறார் தமிழிசை, தெனாவட்டாக பேசுகிறார் தமிழிசை. இப்படிப்பட்ட அவரை குடியரசுத்தலைவர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தமிழகத்தில் பிறந்திருந்தால் இன்னொரு மாநிலத்தில் அரசியல் செய்ய வேண்டும் என இந்திய அரசியல் சட்டத்தில் எங்கேயாவது கூறியிருக்கிறார்களா? இவர் எதுக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும். அப்படி ஏதாவது அவசியம் இருக்கிறதா? தேவையில்லாத வேலைகளைத் தமிழிசை தொடர்ந்து செய்து வருகிறார். இது தேவையில்லாத ஒன்று, ஆனாலும் அதை மெனக்கெட்டு செய்து வருகிறார். இவர் தமிழகத்தில் அரசியல் முன்பு செய்திருக்கலாம், இப்போது அவர் ஆளுநர். அவரின் பணிகளை அவர் பார்க்க வேண்டுமே தவிர அண்டை மாநிலத்தில் அரசியல் செய்வேன் என்று சொல்வதெல்லாம் ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகமாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இது அவரின் பதவிக்கும் அவருக்கு அழகு சேர்க்காது.