முத்தலாக் தடை சட்டம் இரண்டு நாள்களுக்கு முன்பு எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் விரைவில் நிறைவேறும் என்று அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையில், மத்திய அரசு எந்த நம்பிக்கையில் அதனை நிறைவேற்றுவோம் என்கிறார்கள் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த இதற்கு முன் 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது கடுமையாக எதிர்த்த அதிமுக, தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மசோதா சில மாதங்களுக்கு முன்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது இதுகுறித்து பேசிய அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, "இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இறைவனுக்கே எதிரான மசோதா. இதுவரை யாரும் செய்யாத வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஆள நீங்கள் முயற்சி செய்து வருகிறீர்கள், 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்த அவையில் உரையாற்றிய அம்பேத்கர், முஸ்லிம் சமூகத்தினர் கிளர்ந்து எழும் வகையில் எந்த அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது, அவ்வாறு ஒரு அரசு செயல்படுமானால் அது புத்திசுவாதீனமற்ற அரசாகவே இருக்கும்" என்று கடுமையான வார்த்தைகளால் அந்த மசோதாவை எதிர்த்தார். இந்த கருத்தைதான் அதிமுக தலைவர்கள் அனைவரும் அப்போது ஒருசேர கூறினார்கள்.
ஆனால், அன்வர் ராஜா பேசியதற்கு எதிராக இந்த மசோதாவை ஆதரி்த்து ரவீந்திரநாத் வாக்களித்திருப்பதை அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முஸ்லீம் மக்கள் பெருவாரியாக உள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தால், நம்முடைய வெற்றி கேள்விக்குறியாகுமே என்று எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மசோதாவால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த முரண்பாடு அதிகமாகி மீண்டும் ஒரு பிரிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் முணுமுணுப்புகள் எழுந்துள்ளது.